Breaking News

போரில் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தலாம்! - பரணகம


சிறிலங்கா இராணுவத்தினர் கொத்தணிக் குண்டுகளைப் போரில் பயன்படுத்தியதற்கு நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ள, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம, 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

போரில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாகவும், இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக நம்பகமான- சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கடந்தவாரம் வெளியிட்ட வாய்மூல அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம,

“இந்தக் குற்றச்சாட்டு உண்மையில் புதியது அல்ல. பரணகம ஆணைக்குழு தனது இரண்டாவது ஆணையின்படி கிடைத்துள்ள முழு ஆதாரங்களின் அடிப்படையில் முழுமையான விசாரணைகளை நடத்திய பின்னர், இந்த வகை ஆயுதங்களை சிறிலங்கா படையினர் போரில் பயன்படுத்தினர் என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்று முடிவுக்கு வந்தது.

தருஸ்மன் அறிக்கையில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.

போர் முடிந்து மூன்று ஆண்டுகளின் பின்னர், ஐ.நா அபிவிருத்தித் திட்ட கண்ணிவெடி அகற்றும் பிரிவின் உறுப்பினர் ஒருவர் மின்னஞ்சல் மூலம், போர் வலயத்தில் கொத்தணிக் குண்டுகள் பாவிக்கப்பட்டதற்கான சில ஆதாரங்கள் மீட்கப்பட்டதாக கூறியிருந்தார்.

எனினும் சிறிலங்கா இராணுவம், தாம் அத்தகைய ஆயுதங்களைப் பாவிக்கவில்லை என்று அப்போது நிராகரித்திருந்தது. இந்த நிராகரிப்பு அப்போது ஐ.நாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆணைக்குழுவின் தலைவர் என்ற வகையில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். கொத்தணிக் குண்டுகளின் பயன்பாட்டைத் தடை செய்யும் பிரகடனம், போர் நடந்த காலத்தில் நடைமுறைக்கு வரவில்லை. அது, 2010 ஓகஸ்ட் 1ஆம் நாளே நடைமுறைக்கு வந்தது.

எனவே, சிறிலங்கா இராணுவம் கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்தும் தேவை ஏற்பட்டிருந்தால் கூட அது, இந்தக் காலகட்டத்தில் சட்டவிரோதமானது அல்ல.

ஜெனிவா அமர்வுகளைக் கவர்வதற்காக கொத்தணிக் குண்டுகள் விவகாரம் பயன்படுத்தப்படுகின்றது.

பரணகம ஆணைக்குழுவின் இரண்டாவது ஆணை தொடர்பாக 2015 ஒக்ரோபரில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில், போர் முடிவுக்கு வந்த போது, கொத்தணிக் குண்டுகள் பிரகடனம், நடைமுறைக்கு வரவில்லை என்று கூறப்பட்டிருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.