மஹிந்த ஜனாதிபதியாக பிரபாகரனே காரணம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப்பற்றி பேச பஸில் ராஜபக்ஸவுக்கு எந்த உரிமையும் இல்லை என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.
மேலும், கடந்த 2006ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே காரணம் என்பது உறுதியென கூறினார்.
கடந்த தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஸ தோற்றமைக்கான முழுக்காரணமும் இவரே என இசுறு குற்றஞ்சாட்டினார். பஸில் ராஜபக்ஸ வெளிநாட்டிலிருந்து வந்தவர், இவருக்கு நமது கட்சியைப் பற்றி பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை என கூறினார்.
பல மோசடிகளுடன் தொடர்புபட்ட பஸிலுக்கும் எமக்கும் எந்த தொடர்புகளும் இல்லை எனவும் தெளிவுபடுத்தினார். ஐ.தே.கட்சியின் தேவைக்கேற்பவே இவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்தார்.
மேலும், இப்போது அதிகமானோர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப்பற்றி பேசுகின்றனர், ஆனால் யாருக்கும் இந்த தேர்தலை அவரவர் தேவைக்கேற்ப நடாத்த முடியாது எனவும் இதன்போது மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய கூறினார்.