Breaking News

ஐ.நா ஆணையரின் நிலைப்பாட்டிற்கு நாடு கடந்த தமிழீழ அரசு வரவேற்பு



உள்நாடுஇலங்கை விவகாரத்தில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு குறித்தான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் நிலைப்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்பு, கொத்துக் குண்டுகள் பாவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். குறித்த விடயம் தொடர்பில், ஆணையாளர் கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டினை வரவேற்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் ஊடான பரிகார நீதியே அரசியல் தீர்வுக்குப் பொருத்தமான பொறிமுறையாக அமையும் என்பதனை ஐக்கிய நாடுகள் ஆணையாளரின் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் தாம் வலியுறுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை சிறுபான்மையினரென விழிப்பதற்கு அப்பால், அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய ஓர் தேசிய இனம் என்பதனை கவனத்தில் கொள்ளுமாறு மனித உரிமை பேரவையின் ஆணையாளரை வேண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையின், நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்களை குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ”Monitoring Accountability Panel (MAP) ஆணையாளரை வேண்டுவதாகவும் அமைச்சர் சுதன்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.