அனைத்துலகப் பங்களிப்புக்கு இலங்கை அஞ்சவில்லை – மங்கள சமரவீர
பொறுப்புக்கூறலுக்கான நீதிப்பொறிமுறை விடயத்தில் அனைத்துலக பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அஞ்சவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நேற்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த வாய்மூல அறிக்கைக்குப் பதிலளித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“சிறிலங்காவின் தேசிய அரசாங்கத்துக்கு ஒரு ஆண்டு பூர்த்தியாகும்போது பல சாதனைகள் அடையப்பட்டிருக்கும். திருப்தியடைக் கூடிய நிலைமை ஏற்படும். மனித உரிமையை பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல், நல்லிணக்கத்தை அடைதல் என்பனவற்றை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து சிறிலங்காவினால் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.
தற்போது நல்லிணக்க பொறிமுறையொன்றை அமைப்பதற்காக பிரதமர் செயலகத்தினால் நல்லிணக்கப் பணியகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நிலைமாறு கால நீதியை பெற்றுக் கொள்வதற்கு ஒருபொறிமுறை தேவை என்பதை அரசாங்கம் அங்கீகரிக்கிறது. சிலர் இந்தப் பொறிமுறை அமைப்பானது, தாமதிப்பதற்கான உபாயம் எனக் கூறுகின்றனர். இது தவறானதாகும்.
இந்த நல்லிணக்க செயலகம், ஏற்கனவே ஆலோசனைகள் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பொறிமுறையுடன் தொடர்பான விசாரணை நுட்பங்கள், தடயவியல் செயற்பாடுகள் மற்றும் வடிவமைப்பு என்பனவற்றுக்கான ஆலோசனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன.
அதுமட்டுமன்றி மக்களுடன் ஆலோசனைகளை நடத்துவதற்காக சிவில் சமூக பிரதிநிதிகளை கொண்ட விசேட செயலணியொன்றும் நியமனமிக்கப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறல் பொறிமுறையில் மக்களின் ஆலோசனையை பெறவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் நல்லிணக்கத்தை அடைவதற்காக மீள்நிகழாமையை உறுதிப்படுத்தவும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பணியகம் ஒன்றும் சிறிலங்கா அதிபரின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக நிரந்தர பணியகம் ஒன்றை அமைப்பதற்கான வரைவும் முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவைப் பொறுத்தவரை இது நல்லிணக்கத்துக்கான ஒரு மைல் கல் என்று குறிப்பிடலாம். அதுமட்டுமன்றி காணாமல்போனோர் தொடர்பாக, காணாமல்போன சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கான வரைவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சித்திரவதை விவகாரம் தொடர்பாக காவல்துறை ஆணைக்குழுவும் மனித உரிமை ஆணைக்குழுவும் நடவடிக்கை எடுக்கும்.
ஜனநாயகம், அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய மூன்று திட்டங்களின் அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகிறது. தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா தற்போது உலகிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அனைத்துலக சமூகத்துடன் நம்பிக்கையுடன் செயலாற்றுகிறது.
சிறப்பு ஆணையாளர்கள், சிறப்பு அறிக்கையாளர்கள், ஐ.நா. குழுவினர் சிறிலங்கா வந்து செல்கின்றனர். ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் சிறிலங்கா வந்திருந்தார். எம்மை விமர்சிக்கும் அனைவரும் எமது நாட்டுக்கு வருகைதர வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்.
ஒரே இரவில் நல்லிணக்கத்தை அடைய முடியாது. அதற்கு கடுமையான அர்ப்பணிப்பு, கவனம் தேவை. நாம் நீதிப்பொறிமுறையை அனைத்துலக உதவியுடன் அமைப்பது குறித்து ஆராய்கிறோம்.
நீதிப்பொறிமுறை விடயத்தில் அனைத்துலக பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு அஞ்சவில்லை. கடந்தகாலங்களில் பல விடயங்களில் அனைத்துலக பங்களிப்பினை பெற்றுள்ளோம். அனைத்துலக பங்களிப்பில் பல தன்மைகள் காணப்படுகின்றன. இவை குறித்து ஆலோசனை செயற்பாட்டிலேயே தீர்மானிக்க முடியும்.
எவ்வாறெனினும் நீதிப்பொறிமுறை பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை கொள்ளும் வகையில் அமையும். இதற்கான பாதை சவாலாகவுள்ளது. ஆனால் அது நல்லிணக்கத்தையும் இலக்கையும் கொண்டதாகவுள்ளது.
இந்த விடயத்தில் சிலர் எமது அர்ப்பணிப்பு குறித்து சந்தேகம் வெளியிடுகின்றனர். சிலர் அதனை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் எம்மை ஆதரிப்பவர்கள் எமது பயணம் தடையாகி விடுமோ என கவலையடைகின்றனர்.
எமது பயணமானது அர்ப்பணிப்பு, நல்லிணக்கம், அபிவிருத்தி என்பவற்றை நோக்கி அமைகிறது.
அடுத்தஆண்டு மார்ச் மாதம் நான் இங்கு வரும்போது புதிய சிறிலங்கா கட்டியெழுப்பப்பட்டிருக்கும். எமக்கு உதவுகின்றவர்கள், தொழில்நுட்ப உதவிகளை வழங்குகின்றவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
எமது பயணத்திற்கு பொறுமையுடன் ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கிறோம். அனைத்துலக சமூகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவோம் என்றார்.