மஹிந்தவிற்கு அச்சம் - ராஜித
காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணை இடம்பெற்றால், தனது பெயரும் வெளிவந்துவிடும் என்ற அச்சம் காரணமாகவே, மஹிந்த ராஜபக்ச காணாமல்போனோர் பணியகத்தை அமைப்பதற்கு எதிராக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பு நாராஹேன்பிட்டியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவிலாளர் சந்திப்பின் போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உத்தேச காணாமல்போனோர் பணியகம், இராணுவம் உட்பட அரச படையினரை பழிவாங்கும் நோக்கில் அமைக்கப்படுவதாக நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியிருந்தார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன, என்ன தடைகனை ஏற்படுத்தினால் அரசாங்கம் காணாமல் போனோர் பணியகத்தை அமைத்தே தீரும் என சூளுரைத்தார்.
”காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு, அது அமைக்கப்படும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் போது அவர்களின் பெயரும் வெளிவரும் என்று மஹிந்த ராஜபக்சவிற்கு அச்சமாக இருக்கலாம். காணாமல் போனோர் விடையத்தில் அவர்களுக்கும் தொடர்பிருப்பதாக ஏற்கனவே குற்றம்சாட்டப்படுகின்றது. காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதே இந்த பணியகத்தின் நோக்கமாகும். ஒன்று அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்க வேண்டும். அல்லது அவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பதை கண்டறிய வேண்டும். முடிந்தவரை காணாமல் போனவர்களை கண்டறிவோம். அப்படி இல்லாவிடின் அவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதற்கு வேறு வகையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
காணாமல் போனோர் அலுவலகம், இராணுவத்தினரை சிறைவைப்பதற்கான நடவடிக்கையென மஹிந்த ராஜபக்ச கூறியமை தொடர்பில் ஊடகவிலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராஜித சேனாரத்ன..
ராஜித்த – ” இந்த காணாமல் போதல் சம்பவங்களை முன்னெடுத்தது இராணுவத்தினர் தான் என்று அவருக்கு தெரிந்திருக்கும் போல். இல்லாவிடின் நேரடியாக எவ்வாறு முன்கூட்டியே இராணுவத்தினரே குற்றமிழைத்தனர் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அவரால் தீர்மானமொன்றுக்கு வர முடியும்?. ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதேபோல் காணாமல் போனோர் தொடர்பில் பல குழுக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளன. ரவிராஜ் மற்றும் தாஜுடீன் போன்றவர்களின் கொலைகள் தொடர்பிலும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.