முஸ்லிம் மக்களை நாம் பிரித்துப் பார்க்கவில்லை : மாவை
முஸ்லிம் சமூகத்தினருடனான ஆரம்பகால தொடர்பு மிகவும் சிறப்பாக காணப்பட்டதாகவும், பிற்காலத்தில் அதில் பாதிப்பு ஏற்பட்டாலும், முஸ்லிம் மக்களை ஒருபோதும் பிரித்துப் பார்ப்பதில்லையெனவும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி, நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது, வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து ஹரி ஆனந்தசங்கரி வினவியதோடு, இவ்வாறான முரண்பாடுகள் ஆரோக்கியமானதல்லவென்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கும்போதே, மாவை சேனாதிராஜா மேற்குறித்தவாறு தெரிவித்தார். அத்தோடு, இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் மக்களுக்கான கட்சி மாத்திரம் அல்லவென குறிப்பிட்ட மாவை சேனாதிராஜா, அதில் முஸ்லிம் தேசத்தையும் இணைத்தே செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதாக மேலும் தெரிவித்தார்.
எனினும், தற்போது அரசியல் ரீதியாக இரு சமூகத்தினரும் முரண்பட்டே காணப்படுகிறார்கள் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டதோடு, முஸ்லிம் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்றவேண்டிய தேவை உள்ளதென மேலும் தெரிவித்தார்.