இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும்: திருக்குலசிங்கம்
இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என ஈழத் தமிழ் மக்கள் சர்வதேசப் பேரவையின் வெளிவிவகார அலுவலர் டி. திருக்குலசிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் காணி விவகாரம் விரைவாக தீர்க்கப்பட வேண்டும். அதிகளவான காணிகள் இராணுவ வசமே உள்ளன. 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய காணிகளும் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும். இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறந்த வரலாற்றை கொண்டு இருக்கவில்லை.
தற்போது அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் குறித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அரசாங்கம் வந்து 18 மாதங்கள் கடந்துவிட்டபோதும் இன்னும் நீதிப்பொறிமுறைய எவ்வாறு அமையும் என கூறப்படவில்லை.
தலைவர்கள் முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர். இராணுவத்தை குறைத்தல், காணிகளை மீள் வழங்குதல், சர்வதேச விசாரணை பொறிமுறையை நிறுவுவதல் என்பன தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும்’ என தெரிவித்துள்ளார்.