பொருளாதார மத்திய நிலையம் குறித்து இந்திரராசா கவலை !
வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்பது தொடர்பில், உறுதியான முடிவை எடுக்க முடியாதமை குறித்து வடமாகாண சபை உறுப்பினர் இ. இந்திரராசா கவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு அவர் இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதுவொரு துர்ப்பாக்கிய நிலை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து அந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வட மாகாணத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைய வேண்டுமா? தாண்டிக்குளத்தில் அமைய வேண்டுமா? என்பது மிக முக்கிய பேசு பொருளாக அமைந்துள்ளது.வேறெந்தப் பிரச்சினைக்கும் கொடுக்காத முக்கியத்துவம், சாதாரணதொரு விடயத்துக்காக ஏன் வழங்கப்படுகின்றது என்பது வியப்பாகவுள்ளது.
இதுகுறித்து, நீண்ட உரையாடல்கள், நிபுணர்குழு அறிக்கைகள் கலந்தாலோசிக்கப்பட்டிருந்த போதும், உறுதியான முடிவை எடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளோம். 2010 ஆம் ஆண்டு 15 ஆம் திகதி நவம்பர் மாதம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டு, ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் இணைத் தலைவர்களாக அமைச்சர் றிசாட் பதியுதீன், முன்னாள் ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், நூர்தீன் மசூர், ஹுனைஸ் பாறுக், லிங்கநாதன் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், உயர் அரச அதிகாரிகள் என 82 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
அண்மையில் வவுனியாவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கூடி, கலந்துரையாடி பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமையவேண்டும் என்பதை உறுதிசெய்யப்பட்டது. இதனை முதலமைச்சரிடம் தெரிவிப்பதற்காக மறுநாள் அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தோம்.
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் முதலமைச்சர் கலந்துகொண்ட சிதம்பரபுர மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ப. சத்தியலிங்கம் “பொருளாதார மத்திய நிலையத்திற்கான நிதி திரும்பி போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் தாண்டிக்குளத்தில் அமையவேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார்.
இதனைவிட ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமையுமாக இருந்தால் தான் வரவேற்பேன் என்றும், அதுதான் தமது முதல் தெரிவு என்றும் உறுதியாக கூறியிருந்தார்.
இத்தகைய உறுதிப்படுத்தல்களுக்கு பின்னர், கடந்த 03 ஆம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூடிய வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் கூடிய கூட்டத்தில் முடிவொன்றும் எட்டப்படாமல் போனமையும், வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானித்தமையும் கவலைக்குரிய விடயம்.
பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவில் முதலமைச்சர் தன்னிச்சையாக ஓமந்தையை தெரிவு செய்யவில்லை. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானம், நிபுணர் குழு அறிக்கைகள் மற்றும் விவசாய உற்பத்திச் சங்கங்களின் கோரிக்கை என்பனவற்றிற்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஆகவே, இந்தத் தீர்மானத்தை மலினப்படுத்தி முதலமைச்சரை சங்கடப்படுத்தாமல், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத் தீர்மானத்திற்கமைவாகவும் மக்களதும் மக்கள் பிரதிநிதிகளதும் அபிலாசைகளை புரிந்து கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் வட மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா குறித்த கடித்தத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.