Breaking News

ஆட்கடத்தல்கள் வியாபார பட்டியலில் இலங்கை உள்ளடக்கம் - ஜோன் கெரி தகவல்

ஆட்கடத்தல் வியாபாரம் இடம்பெறும் நாடுகளில் ஸ்ரீலங்கா உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளிவிவகார இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கட்டாய தொழில் மற்றும் பாலியல் ஆட்கடத்தலுக்கு உள்ளாவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் கட்டுமான தொழில், ஆடை உற்பத்தி நிலையங்கள் மற்றும் உள்நாட்டு சேவைத் துறைகளில் கட்டாயமான பணிக்கு அமர்த்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறும் முன்னர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு முகவர்களுக்கு அதிக கட்டணங்களை செலுத்தி கடனுக்கு உள்ளாவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி்நாடு செல்வதற்காக புலம் பெயர் ஊழியர்கள், ஊக்கத்தொகையாக முற்பணம் ஒன்றை பெறுவதுடன் அவர்கள் மீண்டும் நாடு திரும்பும் வரை கடன் அடிமைத்தனத்தில் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சில ஸ்ரீலங்கா பெண்கள் ஜோர்தான், மாலைதீவு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் விபச்சாரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் விபச்சாரத்திற்காக பெண்களும் குழந்தைகளும் பாலியல் ஆட்கடத்தலுக்கு உள்ளாவதுடன், சிறுவர்கள் கரையோரப் பகுதிகளில் சிறுவர் பாலியல் சுற்றுலாவிற்காக விபச்சாரத்திற்கு தள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுவர்கள் மற்றும் உடல் நீதியாக குறைபாடு உடையவர்கள் ஸ்ரீலங்காவில் யாசகம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதுடன், கொழும்பில் வீட்டு பணியாளர்களாக கடமையாற்றும் பெண்கள், உடல் உள நீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆட்கடத்தல் வியாபரத்தை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும் அவை முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.