Breaking News

சம்பந்தன் அளித்த உறுதி நடைமுறையில் இல்லை! - அவலத்தில் மக்கள்



கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பரவிப்பா ஞ்சான், இரணைதீவு பகுதிகளில் தமிழ் மக்களுடைய நிலங்களை அபகரித்து கடற்படையினர் மற்றும் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில், அந்த பகுதிகளை சொந்த வாழ் விடமாக கொண்ட மக்கள் தங்கள் சொந்த நிலத்தை பார்பதற்கும் கூட கடற்படை மற்றும் படையினர் அனுமதி மறுப்பதாக மேற்படி பகுதிகளை சேர்ந்த மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து விசனம் வெளியிட்டுள்ள அப்பகுதி மக்கள்,

தமது சொந்த நிலங்களை பார்வையிட அனுமதியுங்கள் என மக்கள் விடுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைமைகள் விடுக்கும் கோரிக்கையினையும் கடற்படையினர் நிராகரித்திருக்கின்றனர். ஆனால் தென்னிலங்கையில் இருந்து வந்திருக்கும் சிங்கள மீனவர்களுக்கு இறால், நண்டு பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர்.

கிளிநொச்சி நகர் பகுதியில் உள்ள பரவிப்பாஞ்சான் பகுதியில் சுமார் 180 ஏக்கர் வரையிலான மக்களுடைய நிலம் படையினருடைய கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை, நிலத்திற்கு சொந்தமான மக்கள் நாங்கள் சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

எங்களுடைய நிலத்தை எதிர்கட்சி தலைவர் வந்து பார் வையிட்டு அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்த போதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்பட்டதாக இல்லை.

இந்நிலையில் எங்களுடைய நிலத்தை பார்ப்பதற்கும், எங்களுடைய வீடுகளை பார்ப்பதற்கும் கூட படையினர் முழுமையாக அனுமதி மறுத்து வருகின்றார்கள். என பரவிப்பாஞ்சான் மக்கள்கூறியிருக்கின்றனர்.

இதேபோன்று கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இரணைதீவு மக்களும் கடற்படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றனர்.

அதாவது 1990ஆம் ஆண்டு தாம் தமது சொந்த நிலத்தை விட்டு வெளியேறிய நிலையில் தமது சொந்த நிலத்தை பார்வையிட கடற்படை அனுமதி மறுத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நாம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி கேட்டதற்கும் கடற்படை மறுத்துள்ளதாகவும், தங்களுடைய நிலத்தில் தென்னிலங்கை மீனவர்கள் நண்டு, இறால் பிடிப்பதற்காக தங்கியிருப்பதாகவும் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றனர்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

பரவிப்பாஞ்சான் பகுதி கிளிநொச்சி நகரில் இருக்கின்றது. அந்தப் பகுதிக்கு சொந்தமான மக்கள் அவர்களுடைய சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப்படாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

இதில் சுமார் 60 வரையான குடும்பங்கள் காணிகளுக்கான ஆவணங்களை வைத்துக் கொண்டு இருக்கின்றபோதும் படையினர் மக்களுடைய நிலத்தை விடுவிக்க தயாராக இல்லை. இந்நிலையில் வாடகை தருகிறோம், ஆவணங்களை தாருங்கள் என்றெல்லாம் மக்களை மோசமாக ஏமாற்றிக் கொண்டிருப்பதையே படையினர் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதேபோல் இரணை தீவு மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தனர். அந்த தீவில் சுமார் 400 குடும்பங்களுக்கான வீடுகள், கால்நடைகள், மற்றும் பெறுமதியான பயன்தரு மரங்கள் காணப்படும் நிலையில் மக்கள் தங்கள் நிலத்திற்கு செல்வதற்கு கடற்படையினர் தடை விதிக்கின்றனர்.

ஆனால் அங்கே தென்னிலங்கை மீனவர்கள் கடற்படையினருடன் தங்கியிருந்து கடற்றொழில் செய்கிறார்கள். ஆனால் எங்களுடைய மக்களுக்கு அந்த கடலில் தொழில் செய்வதற்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களுடைய கால்நடைகள் மூலம் கிடைக்கும் பால் மற்றும் தென்னைகள் மூலம் கிடைக்கும் தேங்காய் ஆகியவற்றை கடற்படையினர் மக்களுக்கே மீண்டும் விற்பனை செய்யும் கொடுமையும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இரணைதீவுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைமைகள், மற்றும் மக்கள் செல்வதற்கான அனுமதியை கோரும் தீர்மானம் கடந்த 11ம் திகதி இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு பூநகரி பிரதேச செயலர் ஊடாக கடற்படையினரிடம் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் கடற்படை அந்த அனுமதியை நிராகரித்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என கடற்படை கூறியிருக்கின்றது.

மேலும் இரணைமாதா நகரில் இரணைதீவு மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கின்றோம் எனவும் கடற்படை கூறியிருக்கின்றது. இது சகித்துக் கொள்ள முடியாத ஒரு கருத்தாகும்.

மக்களுடைய நிலங்கள் மக்களிடமே வழங்கப்படவேண்டும் என கூறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் 40 வீதமான நிலத்தை படையினருடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை பார்த்துக்கொண்டிருக்கின்றமையும் இங்கேயே நடக்கின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.