சர்வதேச தலையீடு தமிழ் மக்களுக்கு தேவை: சிவாஜிலிங்கம்
சர்வதேசத்தின் தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற மாட்டார்கள் என அரசாங்கம் கூறியுள்ளது. இதனையிட்டு தமிழ் மக்கள் ஆச்சரியம் அடையவில்லை.
காரணம் தமிழ் மக்கள் இலங்கையிடமிருந்து நீதியை எதிர்பார்க்கவில்லை. இலங்கை சர்வதேச நீதிபதிகள் தொடர்பில் ஐ.நா.வுக்கு வாக்குறுதியை அளித்துவிட்டு தற்போது அதனை முடியாது என்று கூறுவது என்றால் தமிழ் மக்கள் விடயத்தில் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை சிந்தித்து பாருங்கள்.
கடந்த கால வரலாறுகளை பார்க்கும்போது இலங்கையினால் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியாது என்பது தெளிவாகின்றது. சர்வதேச தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது.
தமிழர்களை ஆக்கிரமித்துக் கொண்டு ஆட்சியாளர்கள் நல்லிணக்கம் பற்றி பேசுகின்றனர். தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படாமல், அவர்களின் அரசியல் உரிமை உறுதிப்படுத்தபடாமல் எந்தவொரு நல்லிணக்கமும் அடையப்பட முடியாது.
எனவே நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையானது சர்வதேச நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் விசாரணையாளர்களையும் உள்ளடக்க வேண்டியதை ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும்.
இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தை திறக்க வேண்டும். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.