பசிலின் கைது ரணிலின் மகா நாடகம்!
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் ஒன்றுக்கு அமையவே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விளக்கமறியலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரதூரமான பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடந்து 24 மணிநேரம் முடிவதற்கு பசில் ராஜபக்ச இலங்கையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
நாடு திரும்பிய அவர் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், திவிநெகும திட்டத்தின் கீழ் நிதியை பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் பசில் ராஜபக்ச அண்மையில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போதைய கைது மற்றும் விளக்கமறியல் என்பன ஒரு தந்திரமான செயல் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவருக்கும் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் சினமன் லேக் ஹொட்டலில் உள்ள வி,ஜ.பி அறையொன்றில் முக்கிய சந்திப்பு நடந்துள்ளது.
சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையிலேயே பசில் ராஜபக்சவை கைது செய்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியில் தனது நிலைப்பாட்டை கட்டியெழுப்புவது மற்றும் தனக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடுகளை மாற்றுவதே பசில் ராஜபக்சவின் அடிப்படை நோக்கமாக இருந்து வருகிறது.
பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான பின்னடைவு, கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அவர் மீது இருக்கும் வெறுப்பை சரி செய்து, மக்கள் அவருடன் இருக்கின்றனர் என்பதன் காரணமாக அரசாங்கம் அவரை கைது செய்தது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற திட்டத்தை செயற்படுத்தும் நோக்கில் இந்த கைது சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பிரதியுபகாரமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து, அதன் பலத்தை பலவீனப்படுத்தி, ஐக்கிய தேசியக்கட்சிக்கு தேவையான வகையில் அதிகாரத்தை செயற்படுத்தும் சூழலை உருவாக்கி தர வேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கேட்டுள்ளார்.
பசில் ராஜபக்சவுக்கு எதிராக பாரியளவிலான ஊழல், மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி பிணையில் விடுவிக்க வேண்டிய தேவைக்கு அமையவே இவ்வாறு சிறிய குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பசில் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கில் மூன்று பக்கங்களை கொண்ட பீ அறிக்கையில் இரண்டு பக்கங்களை கொண்ட பீ அறிக்கை மாத்திரமே ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன. பீ. அறிக்கையின் ஒரு பக்கம் வேண்டும் என்றே காணாமல் போக செய்யப்பட்டிருப்பதன் மூலம் இது தெளிவாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.