Breaking News

போரில் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றதை ஒப்புக்கொள்ள வேண்டும்!



யுத்தத்தின் போது மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றதை ஒப்புக்கொள்ள வேண்டும் என சம உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு பொரள்ளையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சம உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர முதலிகே, தமிழீழ விடுதலைப் புலிகளாலும் போரின் போது கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சம உரிமை இயக்கத்தின் நிறைவேற்றுச் சபை உறுப்பினர்களான ஜூட் சில்வா புள்ளே மற்றும் தர்மலிங்கம் கிருபாகரன் ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்க மாட்டோம் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவித்துவரும் கருத்துக்கள் அரசியல் இலாப நோக்கில் தெரிவிக்கப்படுபவை என்று இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சம உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர முதலிகே தெரிவித்தார்.

இனவாத கருத்துக்களும், யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களை மூடி மறைப்பதுடன் அவற்றை நிராகரிக்கும் வகையிலான கருத்துகளையே ஸ்ரீங்காவில் வாழும் சிங்கள சமூகம் விரும்புவதாகக் கூறும் முதலிகே, அதனாலேயே ஜனாதிபதி அந்த மக்களை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறான கருத்தை கூறி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள இந்த காலப் பகுதியில் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களால், பல விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும், அவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றும் அவர் விசனம் தெரிவித்தார்.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையொன்றில் வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் 25 ஆயிரம் முறைப்பாடுகள் இருப்பதாகக் கூறியதுடன், அவை தொடர்பான விபரங்களையும் வெளியிட்டிருந்தது.

அதேபோல் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, வடக்கு, கிழக்கில் இராணுவம் உட்பட அரச படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.

எனினும் இந்த பரிந்துரைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று குறிப்பிட்ட சம உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், குறித்த ஆணைக்குழுவின் அறிக்கைகளிலுள்ள விடயங்களை தம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற போதிலும் அதிலுள்ள சில நியாயமான பரிந்துரைகளையாவது, பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

இந்த நிலையிலேயே மற்றுமொரு ஆணைக்குழுவை அமைப்பது குறித்து தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் சூளுரைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கில் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள அவர்களது பெற்றோர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகவும் கூறும் முதலிகே, இந்த உரிமையை அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

88, 89 ஆம் ஆண்டுகளில் தெற்கில் நிலவிய ஆயுதப் போராட்டத்தின் போது காணாமல்போனே தமது பிள்ளைகள் மீண்டும் வருவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெற்றோர்கள் இன்னமும் தெற்கில் உள்ள நிலையில், வடக்கிலும் இதே நிலமை இருக்கின்றது என்பதை தம்மால் புரிந்துகொள்ள முடியும் என்றும் சம உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெரிவிக்கின்றார்.

அதேவேளை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் நிகழ்ந்துள்ளதை தாம் மிகவும் பொறுப்புடன் கூறுவதாகவும் குறிப்பிட்ட ரவீந்திர முதலிகே, இந்த கொடூரங்கள் குறித்த உண்மையை அறிந்துகொள்ளும் உரிமை பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி நடந்தது நடந்துவிட்டது, கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து முன்னோக்கி நகருவோம் என பல தரப்பினர் தற்போது கூறி வருவதையும் முதலிகே கோடிட்டுக் காட்டினார்.

இவ்வாறான தரப்பினர் கூறுவது போல் கடந்தகால சம்பவங்களை மறந்து ஒருபோதும் முன்னோக்கி நகர முடியாது என்று குறிப்பிடும் அவர், இனங்களுக்கிடையில் நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவது பிரதான இலக்கு என்றால், போரின் போது நிகழ்ந்த கொடூரங்களின் உண்மைத் தன்மையை பாதிக்கப்பட்ட மக்கள் அறிந்துகொள்வதற்கும், அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கும் இருக்கும் உரிமையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர், நாசி படையினரால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன, இந்த விசாரணைகளுக்கு நாசி படையில்அங்கம் வகித்தவர்களையும், நாசிகளின் கொடூரங்களால் பாதிக்கப்பட்ட யுத சமூகத்தையும் அழைத்திருந்தனர். அதேபோல் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற நிறவெறி யுத்தத்தின் பின்னரும் இதே போன்ற விசாரணைகள் நடாத்தப்பட்டிருந்தன.

அத்துடன் இரண்டாம் உலக யுத்தத்தின் போது கொடூரமான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் இடம்பெற்ற ரூகன்வேல்ட் சித்திரவதைக் கூடத்தை, நூதனசாலையாக மாற்றி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இது போன்ற நடவடிக்கைகளால் தான் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டது.

அதனால் மூன்று தசாப்தகாலமாக தொடர்ந்த கொடிய யுத்தத்தின் போது இடம்பெற்ற கொடூரங்கள் குறித்து பக்கச்சார்பற்ற, நீதியான விசாரணைகளையே நாம் கோரி நிற்கின்றோம் என ரவீந்திர முதலிகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயீட் ராத் அல் உசைன் ஆகியோர் சர்வதேச விசாரணைகள் தொடர்பில் விடுத்துவரும் கோரிக்கைகளின் பின்னணி தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமானது என்றும் சம உரிமை குறிப்பிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டும், அதற்கு முன்னரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கொடூரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை வலியுறுத்தி வந்தது.

எனினும் ஐ.நாவுக்கும், மேற்குலக நாடுகளுக்கும் தேவையான ஆட்சி மாற்றம் ஸ்ரீலங்காவில் ஏற்படுத்தப்பட்ட பின்னர் சர்வதேச விசாரணை குறித்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.

அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஸ்ரீலங்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, ஸ்ரீலங்காவில் அரசியல் கைதிகள் என்ற ஒரு தரப்பினர் இல்லை என்றும், பயங்கரவாத சந்தேக நபர்களே இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கள் தமது பொருளாதார, அரசியல் தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதற்காகவே ஐ.நா உட்பட சர்வதேச சமூகம் பாதிக்கப்பட்ட மக்களை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கும் அந்த அமைப்பு, அதனால் முதலில் உள்நாட்டில் இவ்வாறான குற்றங்கள் இடம்பெற்றதை ஒப்புக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றார்.

எனினும் ஸ்ரீலங்காவிலுள்ள அரசியல் வாதிகள் இதற்குத் தயாரில்லை என்று கூறும் முதலிகே, அதனாலேயே தாம் போரின் போது மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

புதிதாக ஆணைக்குழுக்களை அமைக்க முற்படும் அரசாங்கம் முதலில் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல் கையகப்படத்தி வைத்துள்ள காணிகளை விடுவிக்குமாறும், காணாமல் போனோர் தொடர்பில் நீதியான விசாரணைகளை நடாத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையை அறிந்துகொள்ள இடமளிக்க வேண்டம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இவற்றை செய்ய முன்வராது எத்தனை ஆணைக்குழுக்களை அமைத்தாலும் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்றும் சம உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.

இதற்காகவே கடந்த 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் கையெழுத்துத் திரட்டும் போராட்டத்தை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆரம்பித்ததாகவும் தெரிவித்த ரவீந்திர முதலிகே, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



கையகப்படுத்திய காணிகளை விடுவியுங்கள், வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, மேலதிக படையினரை வெளியேற்றுக்கள், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு அவர்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுங்கள், அரசியல் கைதிகளை விடுவியுங்கள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த கையெழுத்துத் திரட்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சமர உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.