Breaking News

சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் கிடைக்காமைக்கு வட சுகாதார அமைச்சரே காரணம்!

சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்காமைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தி யலிங்கமே காரணம் என்ற கருத்துப்பட வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்கூரேதெரிவித்துள்ளார்.



தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் நேற்றைய தினம் ஆளுநரது அலுவலகம் முன்பாக கூடியிருந்தனர்.

காலை ஒன்பது மணிமுதல் ஆளுநரது அலுவலகம் முன்பாக கூடியிருந்த சுகாதார தொண்டர்கள், பிற்பகல் 2 மணிவரை அங் கேயே ஆளுநருடன் சந்திப்புக்காக காத்திருந்து ஆளுநரைச் சந்தித்துள்ளனர் எனினும் அவர்களுக்கு தகுந்த பதில் வழங்கப்படாமையால் கூடியிருந்த தொண்டர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் காணப்பட்டனர். இது தொடர்பில் அங்கிருந்த தொண்டர்கள் தெரிவிக்கையில்;,

யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார பணிமனைகளிலும் பணிபுரிந்த சுமார் 150 பேர் இன்றய தினம் எமது நிரந்தர நியமனம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினோம். இதன் போது 820 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான அனுமதி மத்திய அமைச்சினால் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில்,

அதனை வழங்குவதற்கான பணியாளர் வெற்றிடம் தற்போது இல்லை அதனால் நியமனங்களை வழங்க முடியாது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தன்னால் எதுவும் செய்யமுடியாது உள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.


வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் கூறியிருப்பதனை போன்று வடக்கு மாகாணத்தில் பணியாளர் வெற்றிடம் இல்லை என்பது தவறானதாகும், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தற்போதும் பணியாளர் வெற்றிடங்கள் உண்டு.

இது தொடர்பில் வடக்கு முதலமைச்சருக்கும் தெரியப்படுத்தி உள்ளோம், எனினும் எமக்கான நிய மனம் இதுவரை வழங்கப்படவில்லை. ஆகவே தான் நாங்கள் இன்று (நேற்று) வடக்கு மாகாண ஆளுநரினை சந்திப்பதற்கு வந்துள்ளோம். வடக்கு மாகாண ஆளுநரும் வடக்கு மாகாண சபையால் தான் நியமனம் வழங்க முடிய வில்லை என கூறியுள்ளார்.

ஆகவே இப்போது நாங்கள் எங்கே செல்வது என்று தெரிய வில்லை. எமது இறுதி முடிவு எமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடு படுவதே ஒரே வழி என அவர்கள் தெரிவித்துள்ளனர்.