Breaking News

இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்க முடியாது – இலங்கை திட்டவட்டம்


இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது என்றுஇலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட கடற்றொழில் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீர,

”அனைத்துலக கடல் எல்லையை மீறிய போது கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினால் கைப்பற்றப்பட்ட, இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிப்பதில்லை என்று  அரசாங்கம் உறுதியாள முடிவை எடுத்துள்ளது.

இந்தப் படகுகளை விடுவிக்குமாறு பல்வேறு சக்திகள் எமக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்த அழுத்தங்களுக்கு நாம் அடிபணியமாட்டோம்.

100 வரையான இந்திய இழுவைப்படகுகள் எம்மால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. எமது தடுப்பில் உள்ள படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ஊடுருவல்கள் படிப்படியாக குறைவடையும்.

ஆனால் அத்துமீறும் மீனவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி விடுவிப்போம். அவர்களை நீண்டகாலத்துக்குத் தடுத்து வைக்கும் எண்ணம் கிடையாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடிப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசாங்கம், இந்திய மத்திய அரசிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.