ஐ.நா ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு ஆயத்தம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 32ஆவது அமர்வு, இம்மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாட்டில் கலந்துகொள்வதோடு, ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே குறித்த குழுவினர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா அமர்வில், இலங்கை தொடர்பில் ஐ.நா ஆணையாளர் வாய்மூல அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். குறித்த அறிக்கையில், கடந்த வருடம் ஐ.நா அமர்வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் செயற்படுத்தப்பட்ட விதம், அதன் முன்னேற்றம், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்துவார்.
அத்தோடு, இம்முறை ஐ.நா மாநாட்டில் இலங்கை தொடர்பில் அரச நிறுவனங்களாலும் பல்வேறு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இம்முறை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட உள்ளக பொறிமுறைய மீதான அறிக்கையுடன், அரசாங்கத்தின் குழுவொன்றும் ஜெனீவா நோக்கி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.