Breaking News

ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியது- பொதுமக்கள் சிதறி ஓட்டம்(காணொளி)

கொஸ்கம-சலாவ இராணுவ முகாமில் இன்று
மாலை ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறிக் கொண்டிருப்பதால், அந்தப் பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவிசாவளை – கொழும்பு பிரதான பாதை, கொஸ்கம பிரதேசத்தில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன் தீ சம்பவத்தை பார்வையிட குறித்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினால் அதனைச் சூழ 8 மீற்றர் தூரத்தில் வசிப்போரை அந்த இடங்களிலிருந்து அகன்று செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்டுள்ள தீவிபத்தினால் ஒரு புறம் கலுஅக்கல வரையும் மறுபுறம் அவிஸ்ஸாவலை வரை வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த வெடிப்பு சம்பவத்தினால் இராணுவத்தினர் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்துள்ளபோதும் வெளிவந்துள்ள காணொளியில் பலர் கொல்லப்பட்டும் பலர் காயமைடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.



அத்துடன் முப்படையினரும்,தீயணைப்பு படையிரும் தீயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும்,அந்தப் பிரதேசத்தைச் சூழவுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவத்தின் சத்தமானது 50 கிலோமீற்றர தூரத்தில் உள்ள தெரணியகல நூரி தோட்டம் வரை கேட்டதாகவும், வெளிவரும் புகை,வெளிச்சங்களைக் கொண்டு கொஸ்கம பிரதேசத்தை பார்க்க கூடியதாகவுள்ளதாகவும் இந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தப் பிரதேசத்துக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.