தாமதமானாலும் தீர்வு நிச்சயம் என்கிறார் ராஜித
போர்க்குற்ற விசாரணைகளை அரசாங்கம் தாமதப்படுத்துவதாக கூறுவதோ அல்லது உண்மைகளை கண்டறியும் பொறிமுறைகளில் அரசாங்கம் இழுத்தடிப்புகளை செய்கின்றது என்று கூறப்படுவதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உண்மைகளை கண்ட றியும் பொறிமுறையின் ஆரம்பகட்ட நகர்வுகளில் வெற்றி கண்டுள்ளோம். எனினும் எந்தத் தீர்வையும் உடனடியாக பெற்றுவிட முடியாது என அரசாங்கம் தெரிவித்தது.
போர்க்குற்ற விசாரணைகள் ஸ்தம்பிதம் குறித்து ஐ.நா. விசேட அறிக்கையாளரிடம் சுட்டிக்காட்டுவதாக சிவில்சமூகம் தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விபரித்த போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் சரியான வகையில் தமது செயற்பாடுகளை கையாண்டு வருகின்றது. போர்க்குற்ற விசாரணைகளை அரசாங்கம் தாமதப்படுத்தவில்லை.
யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் முன்னைய அரசாங்கம் 6 ஆண்டுகள் ஆட்சி செய்தது. தீர்வு தொடர்பில் அப்போது முன்னெடுத்த நகர்வுகள் தொடர்பிலும் இந்த ஒரு ஆண்டு காலத்தில் நாம் எடுத்த நகர்வுகளிலும் பாரிய வித்தியாசங்கள் உள்ளன.
எனினும் தீர்வும் மிக விரைவில் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் ஏமாற்றத்தை கொடுக்கின்றது. எந்தத் தீர்வையும் உடனடியாக பெற்றுவிட முடியாது. எவ்வாறு இருப்பினும் எமது ஆட்சியில் பிரச்சினைகளுக்கான தீர்வு உறுதிப்படுத்தப்படும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. ஆட்சி மாற்றத்தின் போது நாம் முன்வைத்த முக்கிய வாக்குறுதியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் நிறைவேற்றுவர்.
அதேபோல் சிறுபான்மை மக்களின் நலன் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.இப்போதும் நாம் தீர்வு திட்டம் தொடர்பில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தீர்வு காணலாம் என நம்புகின்றோம்.
நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு எமது ஆட்சியில் தீர்வு நிச்சயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இப்போதே வடக்கில் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அம்மக்களின் காணிகள் மீளவும் அவர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.
காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் ஆணைக்குழு மூலமாக ஆராயப்பட்டு வருகின்றது. ஆகவே விரைவில் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
நாம் மீண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனினும் கடந்த காலத்தைப் போல எந்தச் சிக்கலும் இம்முறை இருக்காது என அரசாங்கம் நம்புகின்றது என்றார்.