தேசிய அரசாங்கத்திற்கு சவால் விடுக்க முடியாது
தற்போதைய தேசிய அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டில் உருவாக்கப்பட்டது. எனவே, தேசிய அரசாங்கத்தின் சட்டபூர்வ தன்மை குறித்து நீதிமன்றில் சவால் விடுக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை சார்பில் ஆஜரான சடடத்தரணி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் சட்டவிரோதமானது என தெரிவித்து அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பில் எதிர்ப்புக்களை வெளியிட அனுமதியளிக்குமாறு சட்டத்தரணி டி சில்வா உச்ச நீதிமன்றில் கோரியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மெய்யான தேசிய அரசாங்கம் என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் எதிர்ப்புக்களை வெளியிட அனுமதியளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.
தேசிய அரசாங்கம் ஜனாதிபதியின் தலையீட்டினால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு சட்ட ரீதியாக சவால் விடுக்க முடியாது.சவால் விடுக்கும் வகையிலான வழக்கு ஒன்றை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றிற்கு அதிகாரமில்லை என சட்டத்தரணி டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு காணப்படும் நிறைவேற்று அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டே சட்டத்தரணி இந்த வாதத்தை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காரணிகளை கருத்திற் கொண்ட நீதிமன்றம், எதிர்ப்பை வெளியிட சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.பிரதம நீதியரசர் கே.சிறிபவன், உபாலி அபேரட்ன மற்றும் அனில் குணரட்ன ஆகிய நீதியரசர்கள் குழாம் எதிரில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
களனி பல்கலைக்கழத்தின் பேராசிரியரான விமலதர்ம அபயவிக்ரம மற்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் தேசிய அரசாங்கம் சட்ட ரீதியானதல்ல எனத் தெரிவித்து உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
அமைச்சரவை, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர், அனைத்து அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் அரசியல் அமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை என மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.