மஹிந்தவின் மாளிகையை கேட்கிறது வடமாகாண சபை
காங்கேசன்துறை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவினால் கட்டப்பட்டுள்ள மாளிகையினை வடமாகாண சபையின் பாவனைக்கு வழங்க ஏற்பாடு செய்யுமாறு வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
யாழ்.மாவட்ட இரண்டாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போது, வடமாகாண சபையின் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த இடமாக காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள மாளிகை காணப்படுகின்றது.
ஆகவே மகிந்தவினால் அமைக்கப்பட்டுள்ள குறித்த மாளிகையினை பெற்றுத்தருமாறு சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்தார்.
வடமாகாண சபையின் சார்பாக கடிதம் ஒன்றினை தமக்கு வழங்குமாறும், அந்த கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து வேண்டுகோள் ஒன்றினை விடுப்பதாகவும், வடமாகாண முதலமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் இதற்கு பதிலளித்தார்.
ஏற்கனவே யாழ். பல்கலைக்கழகமும் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அது சிறந்த இடமென்றும், தமக்கு அந்த இடத்தினை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், மற்றுமொருவரும் தமக்கு வழங்குமாறு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.