வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேக நபர்கள் விளக்கமறியல்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர்களது உறவினர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் க.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.
ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றில் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், வித்தியாவின் தாயாரை கொலை சந்தேகநபர்களான சுவிஸ்குமார் மற்றும் உஷாந்தன் ஆகியோரது உறவினர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சட்டத்தரணி ஊடாக வித்தியாவின் தாயார் நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யுமாறு ஊர்காவல்துறை பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பதில் நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.