பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றிய பிரிவினை: ஏன் இணைந்தார்கள்... ஏன் பிரிந்தார்கள்...?
பெரிய சச்சரவுகள் ஏதுமின்றி, ஒரு பிரிவு நிகழ்ந்திருக்கிறது. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருது வெளியேற முடிவு செய்திருக்கிறது.
இது, அந்த நாடு தான்தோன்றித் தனமாக தானே எடுத்த முடிவு அல்ல. அது மக்களிடம் வாக்கெடுப்பு நிகழ்த்தி, ஜனநாயக வழியில் பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறது. வாக்கெடுப்பில் 48.11 சதவீதம் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்போமென்றும், 51.89 சதவீதம் பேர் வெளியேறுவோமென்றும் வாக்களித்து இருக்கிறார்கள். உண்மையில் இது பிரிட்டனுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கடினமான காலம்தான்.
என்ன ஆனது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு...?:
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை அந்நாட்டின் பிரதமர் கேமரூன் விரும்பவில்லை. அவர், “என் கருத்தைவிட, எதிர்க்கட்சிகளின் கருத்தை விட மக்கள் கருத்துதான் மிகவும் முக்கியம். அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். தேசத்தின் பொருளாதாரம் வலிமையானதாகத்தான் இருக்கிறது. யாரும் அச்சப்பட வேண்டியதில்லை ” என்று சொல்லி இருப்பதோடு, தன் பதவியையும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
இன்னொரு பக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டோனால்ட் டஸ்க், “ஒன்றியத்தில் மிச்சமுள்ள 27 நாடுகளின் தலைவர்களுடன் விவாதிப்போம். நான் கடந்த சில தினங்களாக ஒன்றியத்தில் உள்ள பிற நாட்டின் தலைவர்களுடன் பேசி வருகிறேன். அவர்கள் பிரிட்டன் வாக்கெடுப்பின் முடிவு என்னவாக வந்தாலும், நாம் இணைந்தே இருப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.” என்று கூறியுள்ளார். ஆனால், உண்மை அப்படியானதாக இல்லை. ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்தில் இப்போதே பிரிவினை கோஷம் கேட்க துவங்கிவிட்டது.
ஃபிரான்ஸின் இடதுசாரி கட்சியை சேர்ந்த ஜியன் லக் மெலின்கன், “இது முடிவல்ல. இதுதான் துவக்கம். ஃபிரான்ஸில் இதுபோன்ற ஒரு வாக்கெடுப்பு நடந்திருந்தாலும், அதுவும் பிரிந்து செல்லவே விரும்பி இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.
ஒரு பக்கம் பிரிட்டனில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை விரும்பாத மக்கள், இந்த பிரிவினைக்காக பிரசாரம் செய்த போரிஸ் ஜான்சனை வசைபாடி இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்காட்லாண்ட் மக்களும், வட அயர்லாந்து மக்களும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்பதைதான் விரும்பினார்கள். பிரிட்டனிலிருந்து தனியாக பிரிந்து செல்லும் வரை அதுதான் தங்களுக்கு பாதுகாப்பு என்று நம்பினார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் இருக்க வேண்டும் என பெரும் பிரசாரத்தை அவர்கள் மேற்கொண்டார்கள். ஆனால், அது பயனற்றதாக ஆகிவிட்டது.
ஏன் இணைந்தார்கள்... ஏன் பிரிந்தார்கள்...?:
பிரிட்டன் ஏன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்தது என்பதை பார்க்கும் முன், ஏன் ஐரோப்பிய ஒன்றியம் உருவாகியது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தாய், ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு கூட்டமைப்பு. இது 1951 ம் ஆண்டு தோன்றியது. பிறகு 1957 ம் ஆண்டு ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம்,லக்ஷம்போர்க் (Luxembourg) மற்றும் நெதர்லாந்த் ஆகிய நாடுகள் இணைந்து, இதை ஐரோப்பிய பொருளாதார சமூகமாக உருமாற்றின. 1973 ம் ஆண்டு, இதில் பிரிட்டனும் சேர்ந்தது. இதன் நோக்கம் வணிக நலன்களாக மட்டும்தான் இருந்தது. அதாவது, இந்த நாடுகளுக்குள் தங்கு தடையற்ற வர்த்தகம்.
இது 1993 ம் ஆண்டு, மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தம் (Maastricht Treaty) மூலம் ஐரோப்பிய ஒன்றியமாக உருப்பெற்றது. இதில் 28 நாடுகள் இடம்பெற்றன. இந்த ஒப்பந்தம் ஏதோ ஓராண்டில் உருவானதல்ல. 1972 முதல் பல நாடுகளில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின்போது மக்களுக்கு சொல்லப்பட்டது, 'ஒன்றியமாக இணைந்தால் நம் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்' என்பது. இதில் முரண் என்னவென்றால், இந்த பிரிவினைக்கு ஆதரவு வேண்டி பிரசாரம் மேற்கொண்ட போரிஸ் ஜான்சனின் பயன்படுத்தியதும் இதே பதத்தைதான். “நாம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினால் நம் தேசத்தின் பொருளாதாரம் வலிமையடையும்.” என்றார். ஆக இணைந்த போதும், பிரிந்த போதும் சொல்லப்பட்டதற்கான காரணம் பொருளாதாரம். ஆனால், உண்மையில் அதுமட்டும் காரணமல்ல.
ஏன் மக்கள் பிரிவினையை விரும்பினார்கள்...?:
பொருளாதார தேக்கம், பங்கு சந்தை வீழ்ச்சி என்பதையெல்லாம் கடந்து, பிரிட்டன் மக்கள் ஏன் பிரிந்து செல்ல விரும்பினார்கள் என்பதை ஆராய வேண்டும். அதை ஆராய்வதில்தான் பல இனங்கள் ஒன்றாக வாழும் தேசங்களின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது.
பூர்வீக பிரிட்டானிய மக்கள், தங்களின் வேலை வாய்ப்புகளை ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பிற நாடுகளின் மக்கள் பறித்து கொள்வதாக எண்ணினார்கள். பிற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறும் மக்களால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று நம்பினார்கள். இதில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும், இது முழு உண்மையும் இல்லை. ஆனால், இந்த எண்ணம்தான் இப்போதைய பிரிவினைக்கு காரணம். இந்த பிரிவினை கோஷம் உடனே ஏற்பட்டதல்ல... கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அங்கு கேட்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணைந்து இருக்கும் வரை, பெரிதாக விசா கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை. ஒருவர் சுலபமாக நெதர்லாந்தில் இருந்தோ, ஃபிரான்சில் இருந்தோ பிரிட்டனிற்கு வேலை தேடி செல்லலாம். குறிப்பாக போலாந்திலிருந்தும், ரொமேனியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் பிரிட்டனுக்கு வேலை தேடிச் சென்றார்கள். துவக்கத்தில் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட பிரிட்டன் மக்கள், நாளடைவில் தங்கள் வேலை வாய்ப்புகள் பறிபோவதாக கருதினார்கள்.
அதேவேளை, நிறுவனங்களும் இதை பயன்படுத்திக்கொண்டன. பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு சம்பளமாக, மாதம் இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பிறநாட்டினர் அதே வேலைக்கு ஐம்பாதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வரத் தயாராக இருந்தார்கள். இதை நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டன. இதனால் பிரிட்டனில் படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் தடுமாறினார்கள்.
இன்னொரு பக்கம், ஐரோப்பியா தன் கதவுகளை அகதிகளுக்காக திறந்தே வைத்திருந்தது. ஃபிரான்ஸ், நெதர்லாந்தில் குடியேறிய அகதிகள், கொஞ்சம் கொஞ்சமாக பிரிட்டனை நோக்கி நகரத் துவங்கினார்கள். அதுபோல், ஆப்ரிக்காவிலிருந்தும் வேலை தேடி ஐரோப்பியா சென்றவர்களும், பிரிட்டனுக்கே சென்றார்கள்.
பிரெக்ஸிட் பொதுஜன வாக்குடுப்பிற்கு ஒரு நாள் முன்பு, ஜெர்மானிய தலைவர் ஏஞ்சலா மெர்கல், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் வரை பிரிட்டனால் வெளிநாடுகளிலிருந்து குடிபெயர்பவர்களை கட்டுப்படுத்த முடியாது” என்றார்
சிறுபான்மையினர் ஆகிவிடுவோமென்ற அச்சம்:
ஐரோப்பிய ஒன்றியம் 1993 ம் ஆண்டு அமைவதற்கு முன்பு, புலம் பெயர்பவர்கள் பிரிட்டனுக்கு பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. அப்போதெல்லாம் இந்தியாவிலிருந்துதான் பெரிய எண்ணிக்கையில் பிரிட்டனுக்கு சென்று கொண்டிருந்தார்கள். ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் உருவான பின், இந்த எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்தது. 1993 - 2014 காலகட்டத்தில் மட்டும், வெளிநாட்டில் பிறந்து பிரிட்டனில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 8.3 மில்லியன் ஆனது. இதை பிரிட்டானிய மக்கள் விரும்பவில்லை. அதாவது சொந்த தேசத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக சிறுபான்மையினர் ஆகிவிடுவோமோ என்ற மக்களின் அச்சம்தான் பிரிவினை வரை வந்து நிறுத்தி இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், குடியேறிகளால் தங்கள் தேசத்தின் கலாசாரம் சீரழிகிறது, சட்டம் ஒழுங்கு கெடுகிறது என்பதும் பிரிட்டன் மக்களின் குற்றச்சாட்டு.
சொந்த நிலத்தில் சிறுபான்மையினர் ஆகிவிடுவோம், பிற இனத்தவர்களால் தம் வேலை வாய்ப்புகள் பறிப்போகிறது, கலாச்சாரம் சீரழிகிறது என்பது உண்மையில் பிரிட்டனின் அச்சம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் படர்ந்துள்ள அச்சம். ஏன்...? உலகம் முழுவதும் பல தேசங்களை இந்த அச்சம் பீடித்துள்ளது. பொருளாதார சரிவை ஆராய்வதைவிட, இதில் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.
- மு. நியாஸ் அகமது