Breaking News

தமிழர் பிரச்சினை குறித்து சுமந்திரனுக்கு அக்கறையில்லை: புலம்பெயர் அமைப்பு



அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அக்கறை செலுத்தவில்லை. மாறாக அவரது செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு சார்பானதாகவே அமைந்துள்ளது என அமெரிக்காவிலுள்ள இரு புலம்பெயர் அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில், அமெரிக்க காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றில் கலந்துக் கொள்ளும் பொருட்டு சுமந்திரன் வொஷிங்டனுக்கு பயணித்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த அமைப்புக்கள் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளன. மேலும், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசத்துடன் இணைந்து அமெரிக்க காங்கிரஸின் உத்தியோகபூர்வமற்ற தரப்பினரை அவர் சந்திக்கவிருப்பதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிக் கதைக்காமல் இலங்கைத் தூதுவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இவர் சந்திப்புக்களை நடத்தவிருப்பதாகவும் ஒபாமாவுக்கான தமிழர்கள் மற்றும் அமெரிக்க தமிழர் பேரவை என்ற இரண்டு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, தமிழ் மக்களின் பகுதிகளில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம், பாதுகாப்புத் தரப்பினரால் தொடரும் துஷ்பிரயோகங்கள், காணாமல் போனவர்களின் விடயங்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து சுமந்திரன் பேசுவார் என எவரும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன் இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் தொடர்பான காங்கிரஸ் உட்குழுவே சுமந்திரனை அழைத்துள்ளது. இந்தக் குழு அமெரிக்க காங்கிரஸிலோ அல்லது அமெரிக்க அரசாங்கத்திலோ எந்தவிதமான செல்வாக்கையும் கொண்டிராத குழுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.