வடக்கிலுள்ள இராணுவத்தினர் குறித்து இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
இலங்கையில் தமிழர் பகுதிகளிலுள்ள இராணுவத்தினரை திரும்ப பெறும் விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள சிங்களப் படையினரை திரும்பப் பெற முடியாது என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தும் நோக்கம் கொண்ட சிங்கள அரசின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் மிகப் பெரிய இனப்படுகொலையாக கருதப்படும் இந்த கொலைகள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையகம் விசாரணை நடத்திய போதிலும் குறிப்பிடத்தக்க வகையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
தமிழர்கள் நிம்மதியாக வாழும் வகையில் வட மாநிலத்திலுள்ள இலங்கை இராணுவம் திரும்பப் பெறப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியதாகவும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள இலங்கை இராணுவத்தின் வடபிராந்திய தளபதி மகேஷ் சேனாநாயக்க, வட மாகாணத்தில் தனிநாடு கோரிக்கை எழாமல் தடுப்பது தான் இராணுவத்தின் நோக்கம் என கூறியிருந்ததாக பாமக நிறுவுனரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈழத் தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக வைத்திருக்கவே இலங்கை அரசு விரும்புகின்றது என கூறியுள்ள ராமதாஸ், தமிழர்களுக்கு எந்தவித உரிமையையும் வழங்க சிங்கள அரசு தயாராக இல்லை என்பதையே இது வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.