Breaking News

போர்க்குற்ற விசாரணை பற்றிய பேச்சுக்கள் இல்லையாம்: அரசாங்கம் அறிவிப்பு

யுத்தக் குற்றங்கள் தொடர்பான பேச்சுக்கள் தற்போது இல்லை என்றும் போர்க்குற்றவாளியாக மின்சாரக் கதிரையில் யாரையும் அமர்த்த வேண்டிய தேவையில்லை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜெனீவா தீர்மானங்கள் பற்றிய பேச்சுக்களும் இல்லை என்றும் இந்திய அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தற்போது நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருவதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

ஜப்பானில் நடைபெற்ற ஜீ-07 மாநாடு தொடா்பாக விளக்கமளிக்கும் செய்தியாளா் மாநட்டில் உரையாற்றிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பெருந்தோட்ட துறை அமைச்சர் நவீன் திஸதநதயக்கா ஆகியோர் கூட்டாக இவ்வாறு அறிவித்துள்ளனர்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த அமைச்சர்கள் போர்க்குற்றம் தொடர்பாக மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஜெனீவாவுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் வழங்கிய உறுதிமொழியை மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எனவும் வேறு போர்க்குற்றச் சாட்டுக்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டனர்.

இந்த மாநட்டில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள், போர்க்குற்ற விசாரணை தொடர்பான விடயங்களை மூடிமறைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதிக்கட்ட போரில் சுமார் 40ஆயிரம் பேர் கொல்லப்பட்டமை தொடர்பாக ஜ.நா.நிபுணர்குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்று பதிலளித்த அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவ்வாறான விடயங்களை ஒரு சில ஊடகங்கள் மாத்திரமே வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தினார்.

நிதியமைச்சர் இந்தக் கேள்வியை எழுப்பிய ஊடகவியலாளர் மீதும் சீறிப்பாய்ந்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

உங்களது பத்திரிகையில் மட்டுமே இந்தப் பிரச்சினை எழுப்பப்படுகின்றது. நாங்கள் இது தொடர்பாக ஏற்கனவே தீர்மானம் எடுத்திருக்கின்றோம். தேர்தலுக்கு முன்னர் மின்சாரக் கதிரைக்குச் செல்ல நேரிடும் என்றே கூறப்பட்டு வந்தது. இருந்த போதிலும் இப்போது அவ்வாறான அச்சம் நீங்கியிருக்கிறது - என்றார்.

எனினும் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஊடகவியலாளர் கேள்விக்கனைகளைத் தொடுத்தார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க,

இவ்வாறான குற்றங்கள் மற்றும் உரிமை மீறல் செயற்பாடுகள் இடம்பெறவே இல்லை என்று அன்றும், இன்றும் கூறிவருகின்றோம் என்று பதில் வழங்கினார்.

இதன்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள், நாடு என்ற வகையில் விசாரணை நடத்தப்படும் என்ற வாக்குறுதியை ஜெனீவாவில் வழங்கியிருப்பதை எடுத்துக்காட்டி வினா எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் ரவி கருணாநாயக்க,

அது மஹிந்த ராஜபக்ச கூறியவை. ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் யுத்தம் நிறைவுபெற்ற பின் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்தபோது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸை முன்னிறுத்தி அவ்வாறு உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன.

அந்த உறுதிமொழிகளுக்கு அமைய எமக்கு முன்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஊடாக மஹிந்த ராஜபக்ச, ஜி.எல். பீரிஸ் ஆகியோரால் அறிவிக்கப்பட்டதற்கே பதில் வழங்க வேண்டியிருந்தது. அந்த இருவராலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு அயைம நடவடிக்கை எடுக்கின்றோம் என்றே கூறியிருக்கின்றோம் – என்றார்.

40 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட விவகாரத்துடன் ஜெனீவாவிற்கு வழங்கப்பட்ட உறுதிமொழி குறித்து ஊடகவியலாளர்களால் இதன்போது துருவித்துருவி கேள்வி எழுப்பப்பட்டது.

எனினும் மஹிந்த அரசாங்கத்தினால் இதற்கான விசாரணை நடத்தப்படும் என்று வழங்கப்பட்ட உறுதிக்கு அமைவாக அதனை நடத்துவோம் என்றே தெரிவித்திருக்கிறோம். எனினும் ஸ்ரீலங்கா படையினர் ஒருபோதும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறலில் ஈடுபடவில்லை. கடந்த அரசாங்கம் இப்படி உறுதிமொழி வழங்கியதோடு, தருஸ்மன் அறிக்கையிலும் விசாரணைக்கான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. ஆகவே அதனை செய்வதாகவே தெரிவித்திருக்கின்றோம் – என்றார்.

இதன்போது குறுக்கிட்டு விளக்கமளித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க,

இந்த விவகாரம் தொடர்பாக உள்நாட்டு நீதிபதிகளின் ஊடாக விசாரரணை நடத்துவதாக நாங்கள் உறுதியளித்திருக்கின்றோம். அதனை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். இது எமது நாட்டிற்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகும். ஸ்ரீலங்காவில் அரசியல் நிலைமை மாற்றம் பெற்றிருப்பதோடு, நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் என்ற சமிக்ஞையின் ஒருபடியாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜி-7 மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது – என்று தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதி நிறைவேற்றப்படாதிருந்ததால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இரத்து செய்யப்பட்டதாக கருத்துப்பரம்பல் ஏற்பட்டமை குறித்து ஊடகவியலாளர்கள் வினா எழுப்பினர்.

எனினும் இதனை நிராகரித்த அமைச்சர் மலிக் சமரசிக்கிரம, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிராகரிக்கப்பட்டமைக்கும் மனித உரிமை விவகாரத்திற்கும் தொடர்பில்லை. அங்கு உரையாற்றிய சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஊடாக ஜெனீவா பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நான் நம்புகின்றேன். வெளிவிவகார அமைச்சர் அங்கு சென்றிருந்தபோது தகுந்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தனர். நல்லாட்சி என்ற வகையில் தகுந்த நடவடிக்கையை செய்வதற்கே எதிர்பார்க்கின்றோம் என்று மழுப்பலான பதிலை அளித்தார்.

இதேவேளை யுத்தத்திற்கு முன்னரே இந்த வரிச்சலுகை தொடர்பாக சர்ச்சை காணப்பட்டதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதன்போது கூறினார்.