மகிந்தவின் தோல்விக்கு பசில் ராஜபக்சவே காரணம் – டிலான் பெரேரா
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததற்கு, அவரது சகோதரர் பசில் ராஜபக்சவே காரணம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹாலி-எலவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததும், பசில் ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பியோடி விட்டார்.
நாங்கள் மகிந்த ராஜபக்சவுடன் தான் இருந்தோம். நாம் அவரைக் கைவிடவில்லை. ஆனால், பசில் 24 மணித்தியாலங்களுக்குள் ஓடி விட்டார்.
அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தோல்வியை உறுதிப்படுத்துவதற்கு, பசில் ராஜபக்ச இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோவுடன் இணைந்து பணியாற்றியதாக விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.
பசில் ராஜபக்ச நாடு திரும்பி, கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்க முயன்றார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
எதிர்ப்புகள் இருந்த போதிலும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அனுமதித்தது.
பசில் ராஜபக்ச இப்போது மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து, புதிய கட்சியை உருவாக்கி, அதன் செயலாளர் பதவியைக் கைப்பற்ற முனைகிறார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், பசில் ராஜபக்ச கட்சியைப் பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.