யாழில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு: இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு கடத்தி செல்லுவதற்காக கொண்டு வரப்பட்ட 100கிலோ கேரள கஞ்சாவினை இன்று(திங்கட்கிழமை) அதிகாலை விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், பாரிய கடத்தல் முயற்சியொன்றையும் முறியடித்துள்ளனர்.
அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட வளலாய் அக்கரை கடற்பகுதியில் வைத்தே இந்த பாரிய கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் முயற்சி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘
அக்கரை கடற்பகுதியினுடாக இருவர் 100 கிலோ கேரள கஞ்சாவினை கடத்தி வந்துள்ளனர். இவ்வாறு கடத்தி வரப்பட்ட கஞ்சாவினை குறித்த பகுதியில் வைத்து வேறொருவருக்கு கைமாற்ற முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலொன்றையடுத்து கடத்தல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் குறித்த கடற்கரை பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கண்கானிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அதிகாலை நான்கு மணியளவில் குறித்த கடற்கரை பகுதிக்கு இருவர் மேற்படி கேரள கஞ்சாவினை கடத்தி வந்திருந்த நிலையில் அதனை கடத்தல்காரர்களிடம் கையளிப்பதற்காக வைத்துக்கொண்டிருக்கும் போது விஷேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்த கேரள கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளனர்.
45 பொதிகளில் பொதியிடப்பட்ட 100 கிலோ கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மாதகல் பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றைய நபர் வளலாய் பகுதியை சேர்ந்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரனையில் தெரியவந்துள்ளதாக விஷேட அதிரடிப்படையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அச்சுவேலி பொலிஸார் ஊடாக நீதீமன்றில் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.