ஈராக் அகதிகள் 15000 பேர் தடுத்து வைப்பு : 20 பேர் மூச்சுத் திணறி மரணம்
ஈராக் அரச படைகளுக்கும் ஐ. எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் கடுமையான யுத்தத்தின் காரணமாக பல்லூஜா பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 15 ஆயிரம் பேரை விசாரணைகள் என்ற பெயரில் ஈராக் படைகள் தடுத்து வைத்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
பல்லூஜா அகதிகளின் மனிதநேய நிலைமைகள் மோசமடைந்து வருவதாக ஐ. நா. எச்சரித்து வரும் நிலையில், இரசாயன சேமிப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி அகதிகளில் 20 பேர் இரசாயன கசிவு காரணமாக மூச்சுத் திணறி மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
இந்நிலையில் இதனை மூடி மறைப்பதற்காக சடலங்களை இரவு நேரங்களில் அதிகாரிகள் கொண்டுசெல்வதாக பால்லூஜா வைத்தியசாலை வட்டாரங்கள் குற்றம் சுமத்தி உள்ளன.
அதேவேளை இடம்பெயர்ந்து வரும் அகதிகள் ஈராக் அரச படைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயற்படும் ஷீஆ குழுக்களின் மூலம் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இலக்காகுவதாக ஐ. நா. சபை குற்றம் சுமத்தி உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் பல்லூஜா பிரதேசத்தில் இருந்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.
ஒரு புறத்தில் பல்லூஜா அகதிகளை உயர் வெப்பநிலை வாட்டும் அதேவேளை, தங்குவதற்கான கூடாரங்கள் மற்றும் விரிப்புக்கள் இன்றி அவதியுறுவதோடு, போதியளவு உணவு, குடிநீர் வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.