இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை – மோடியிடம் வலியுறுத்தினார் ஜெயா
தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக, கடந்த மாதம் மீண்டும் பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா நேற்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.
இதன்போது, 94 பக்கங்கள் அடங்கிய மனுவொன்றையும், இந்தியப் பிரதமரிடம் கையளித்தார். தமிழ்நாட்டின் தேவைகள், அளிக்கப்பட வேண்டிய வசதிகள், நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை உள்ளடக்கிய இந்த மனுவில், இலங்கைத் தமிழர் விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள், இந்தியாவில் எந்த தடைகளுமின்றி வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை வழங்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களுக்கு எதிராக இந்திய அரசாங்கம் தேவையான நடவடிக்கைககளை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை போன்ற, அனைத்துலக அரங்கில், இந்தியா பொருத்தமான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.