Breaking News

சித்திரவதை ஆதாரங்கள்; உறவினர்களை ஜெனீவாவிற்கு அழைக்க ஏற்பாடு



வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு, மலையகத்தில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக திரட்டப்பட்ட முக்கிய ஆதாரங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சபையில்சமர்ப்பிக்க சிவில் அமைப்புக்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

சித்திரவதைகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஸ்ரீலங்காவில் உள்ள சிவில் அமைப்புகள் கடந்த சில மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. அத்தோடு, சித்திரவதை தொடர்பாக பாதிக்கப்பட்ட சிலரை ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடருக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளிலும் சிவில் அமைப்புக்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியது. இந்த கூட்டத் தொடரின் இந்த வருடத்திற்கான அடுத்த அமர்வுகள் எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவிருக்கின்றன.

இந்த நிலையில் அடுத்த அமர்விற்கு ஜெனீவாவிற்கு செல்லவுள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர்,தமது குழுவினரால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் மற்றும் புகைப்படங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை ஜெனீவா அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக சிவில் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்

எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா சார்பாக கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளக பொறிமுறையின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 29 ஆம்திகதி உரையாற்றவுள்ளார்.