உக்ரேனுடன் இலங்கை ஒப்பந்தம் - மகிந்தவுக்கு அடுத்த ஆப்பு
இலங்கையில் தேடப்படும்- உக்ரேனில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை கொழும்பிடம் கையளிப்பதற்கு வசதி செய்யும், உடன்பாடு ஒன்று இலங்கைக்கும் உக்ரேனுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
உக்ரேனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று கீவ்வில், உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் பாவ்லோ லிம்கின்னைச் சந்தித்து நடத்திய பேச்சுக்களின் போதே இதற்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான நடத்தப்பட்ட பேச்சுக்களின் முடிவில், குற்றவியல் விவகாரங்கள் தொடர்பாக பரஸ்பரம் சட்ட உதவிகளைப் பரிமாறிக் கொள்வதற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் இணங்கும் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதன்படி,இலங்கையில் தேடப்படும் குற்றவாளிகள்- உக்ரேனில் மறைந்திருந்தால் அவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோர முடியும். பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும், மகிந்த ராஜபக்சவின் மைத்துனருமான உதயங்க வீரதுங்க தற்போது உக்ரேனில் மறைந்து வாழ்வதாக கருதப்படுகிறது.
அவரை இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கிலேயே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.