டீசலைக் கொடுத்து அகதிகள் படகை வெளியேற்ற இந்தோனேசியா திட்டம்!
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் கரையொதுங்கிய இலங்கைத் தமிழ் அகதிகளின் படகுக்குத் தேவையான 7 மெட்ரிக் தொன் டீசலை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிப் பயணித்த போது, இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியக் கடற்பரப்பில் தத்தளித்த இந்த அகதிகள் படகு கடந்த சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் படகைச் சோதனையிட்ட இந்தோனேசிய அதிகாரிகள், அதில் இருந்த அகதிகளிடம் எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில், இந்தோனேசிய மண்ணில் கால் வைக்கத் தடை விதித்துள்ளனர். எனினும் அகதிகளுக்கான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தப் படகை தமது நாட்டை விட்டு வெளியேற்றுவதில் இந்தோனேசிய அதிகாரிகள் குறியாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஆச்சே மாகாண கடற்பகுதிக்கு நேற்றுமாலை இந்தோனேசிய கடற்படைக் கப்பல் ஒன்றும் அனுப்பி்வைக்கப்பட்டுள்ளது.அகதிகளுக்குத் தேவையான டீசல் மற்றும் உதவிப் பொருட்களை கொடுத்து தமது கடற்பகுதிக்கு அப்பால் அனுப்புவதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதேவேளை, இந்த அகதிகளுக்கு தேவையான உதவிகளை அளித்து, அவர்களைத் தற்காலிகமாகத் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பு பிரதிநிதிகளைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும், உள்ளூர் தொண்டர் நிறுவனங்கள் கோரியுள்ளது.
அத்துடன் அனைத்துலக மன்னிப்புச்சபையும் இந்த அகதிகளுக்கு இந்தோனேசியா புகலிடம் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.