இராணுவத்தினரால் வடக்கு மக்கள் பாதுகாக்கப்படவில்லை : வடக்கு முதல்வர்
வடக்கில் அதிகளவு இராணுவம் குவிக்கப்ப ட்டுள்ளமைக்கு மத்தியிலும் குற்றச்செயல்கள் அதிகரித்து, பெண்களும் சிறுவர்களும் வீதியில் நடமாடமுடியாத நிலைகாணப்படு கின்ற மையானது, இராணுவத்தினரால் மக்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றதென, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புறப் பாடசாலைகளை போன்று கிராமப்புற பாடசாலைகளையும் தரமுயர்த்தும் வகையில், ‘அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற புதிய செயற்திட்டம் இன்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”யுத்தம் நிறைவுற்று 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளமை கவலையளிக்கிறது. குறிப்பாக சாதாரணதர பெறுபேறுகளில் தொடர்ந்தும் வீழ்ச்சிநிலையே காணப்படுகின்றது. இவ்வாறான பின்னடைவுக்கு பல உதாரணங்கள் உள்ளன.
யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வடபகுதியில் ஒழுக்கம் மிகுந்து காணப்பட்டது. பெண்பிள்ளைகளும், சிறுவர்களும் எந்நேரத்திலும் வீதியில் நடமாடவும், வீடுகளில் தனித்திருக்கவும் முடிந்தது. ஆனால் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் பெண்பிள்ளைகளும், சிறுவர்களும், வயது முதிர்ந்தவர்களும் வீதியில் நடமாடவோ, வீட்டில் தனித்திருக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கள்வர்களின் கைவரிசை, காமுகர்களின் சேட்டை, போதைப்பொருள் பாவனையாளர்களின் அட்டகாசம், வாள்வீச்சு என இப்பகுதியை உலுக்கும் பல விடயங்கள் நடந்தேறி வருகின்றன. வடக்கில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான போர்வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்தான், இவ்வாறான சூழ்நிலை காணப்படுகிறது. இதன்மூலம், இராணுவத்தினரால் மக்கள் பாதுகாக்கப்படவில்லை என்றே கூறமுடியும்.
அத்தோடு, மாணவர்கள் தொடர்பில் பெற்றோர் சரியாக கவனிப்பது கிடையாது. பாடசாலை நேரங்களில் மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்துகிறார்களா என்பதை அவதானிப்பதற்குக்கூட, சில சமயங்களில் அதிபர்களும், ஆசிரியர்களும் தவறிவிடுகின்றனர். இவ்வாறான நிலையே, இன்று எம்முன் பூதாகரமாக தோன்றி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. எனவே மாணவர்களின் கல்வி தொடர்பில் அனைவரும் அவதானமாக செயற்பட வேண்டும்” என்றார்.