தமிழருடைய பிரச்சினைக்கு அரசியல் சாசன ரீதியிலான முடிவு வேண்டும்
தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு நியாயமான நிரந்தரமான அரசியல் சாசன ரீதியிலான முடிவு வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சி அலுவலகத்தின் முதலாம் வருட நிகழ்வு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போது அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசியல் சாசனத்தை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட இரா. சம்பந்தன், அதனை அடைவதற்கு தமிழ் மக்கள் ஒன்றாக, ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமையாக நிற்பதே தமிழ் மக்களுக்கு பெரும் பலம் எனவும் சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் ஒற்றுமையாக, ஒன்றாகச் செயற்படுவதை பாராட்டக்கூடிய நிலை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, சர்வதேசத்தின் ஆதரவை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் தமிழ் மக்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் தீர்வு என்பது ஸ்ரீலங்காவில் வாழ்கின்ற எல்லோருக்கும் தேவைப்படுவதாகவும் அந்த தீர்வு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு, போராட்டங்களுக்கு நியாயமான, நிரந்தரமான தீர்வாக அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக ரீதியாக எந்தவிதமான புரட்சியும் இல்லாமல், அமைதியான புரட்சி ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும் அதனையிட்டு, திருப்தி அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
பழைய ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்கள் தற்பொழுது நடைபெறவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அவை தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான முடிவு அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எமது பிரதேசங்களில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக தமிழ் மாணவர்கள் கல்வியில் பின்தள்ளி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கல்வியில் பல பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் கூட அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்த நிலைமை தொடரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
நீண்ட காலமாக தமிழ் மக்கள் பலவிதமான துன்பங்களையும் துயரங்களையும் எதிர்நோக்கியதாகவும் இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்து வந்ததனைச் சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், இந்த நிலைமை தொடரமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.