Breaking News

இடைக்கால நீதிப் பொறிமுறை அவசியம்: ஐ.நா விசேட அறிக்கையாளர்



இலங்கையில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது இன்றியமையாதது என ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நீதவான்கள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பிலான விசேட அறிக்கையாளர் மோனிகா பின்டோ வலியுறுத்தியுள்ளார்.

நீடித்து நிலைக்கக்கூடிய ஜனநாயகமும், நல்லாட்சியும் நாட்டில் நிலவுவதாக இலங்கையை அடையாளப்படுத்த இன்னமும் பல்வேறு மாற்றங்கள் அத்தியாவசியமானதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை அடுத்த ஆண்டு அமர்வுகளில் சமர்ப்பிக்க உள்ளதாகவும், தம்மை இலங்கைக்கு அழைத்தமைக்காகவும், விஜயத்தின் போது ஒத்துழைப்பு வழங்கியமைக்காகவும் இலங்கை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அடிப்படை ரீதியான மாற்றங்களைச் செய்வது குறித்த ஆர்வம் குறைந்து விடக் கூடாது. சட்டத்தின் ஆட்சியால் நிலையான ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கான பாதையை ஏற்படுத்துவதற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

அண்மைய காலத்தில் இடம்பெற்ற விடயங்களைக் கையாள்வதற்கு இடைமாற்றுகால நீதிப் பொறிமுறையொன்று அமைக்கப்படவேண்டியது அவசியமானது. இதற்கான செயற்பாடுகள் விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறான சூழ்நிலையில் இடைமாற்றுகால நீதிப் பொறிமுறையானது சுதந்திரம், பக்கச்சார்பின்மை, நீதிபதிகளின் பங்களிப்பு உள்ளிட்ட விடயங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.