கூட்டு எதிர்க்கட்சிக்குள் நுழைந்து தலைமைப் பதவியை கைப்பற்றும் நோக்கில் பசில் முயற்சி
கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் ஆளுங்கட்சியில் இணைவது குறித்த பிரச்சாரம் பசில் ராஜபக்சவின் கைங்கரியம் என்று மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அணியாக கருதப்படும் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் ஆளுந்தரப்புடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அண்மைக்காலமாக ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கின்றது.
எனினும் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறித்த தகவலை மறுத்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் எந்தவொரு முக்கியஸ்தரும் ஆளுங்கட்சியுடன் இணையப் போவதில்லை. அவ்வாறான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.
ஆனால் கூட்டு எதிர்க்கட்சியினுள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இணைத்துக் கொள்வது தொடர்பாக ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சிலர் அவரை இணைத்துக் கொள்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடுகின்றனர்.
இந்த எதிர்ப்புகளை சமாளித்து கூட்டு எதிர்க்கட்சிக்குள் நுழைந்து அதன் தலைமைப் பதவியை கைப்பற்றும் நோக்கில் பசில் ராஜபக்ச தனது ஆதரவாளர்களைக் கொண்டு இவ்வாறான செய்திகளை பரப்பி வருகின்றார்.
ஆயினும் இதில் உண்மை இல்லை.அதே நேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்கும் பட்சத்தில் கூட்டு எதிர்க்கட்சி அதற்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.