கம்மம்பிலவுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 5 வருட சிறை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மம்பிலவின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
யாராவது ஒரு நபருக்கு நஷ்டம் ஏற்படுத்தும் நோக்கில் போலியான ஆவணம் தயாரித்ததாக நிரூபிக்கப்பட்டால் தண்டனைச் சட்டத்தின் படி 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட சட்டத்தில் இடமுள்ளதாக சட்டத்தரணி யு.ஆர். டி. சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பல மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை போலியான அட்டோர்ணி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டின்பேரிலேயே உதய கம்மம்பில எம்.பி. கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அவுஸ்திரேலிய பிரஜையினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவர் விசாரணை செய்யப்பட்டு வந்தநிலையில், பொலிஸ் விசேட விசாரணை பிரிவினரால் நேற்றுக் (18) காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.