மீள்குடியேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக காணப்படும் இராணுவம்
வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள், யுத்தத்தால் தமது பூர்வீக காணிகளை விட்டு வெளியேறி பல வருடங்களாக மீள்குடியேற்றத்திற்கு காத்திருக்கும் நிலையில், நல்லாட்சியிலும் அவர்களது காத்திருப்பு விடிவின்றி தொடர்ந்தவண்ணமே உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் கோமாரி 60ஆம் கட்டை பிரதேசத்தில் குடியேற்றப்பட்டு வாழ்ந்து வந்த சுமார் 400 மேற்பட்ட குடும்பங்கள், கடந்த யுத்தத்தினால் இடம்பெயர்ந்து சுமார் 30 வருடங்களாக வெளி பிரதேசங்களிலேயே வசித்து வருகின்றனர். இவர்களது மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு வன பரிபாலன திணைக்களமும் இராணுவமும் தடையேற்படுத்தி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, இப்பகுதியின் முன்னாள் கிராமசேவகரான கந்தசாமியிடம் கேட்டபோது, இப்பகுதி மக்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து பொத்துவில், கோமாரி, தாண்டியடி திருக்கோவில் போன்ற பகுதிகளில் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்ததாகவும், எனினும் இன்னும் தமது சொந்த பகுதிகளுக்குச் சென்று மீள்குடியேற முடியாத நிலையே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அண்மையில் தமது சொந்த நிலங்களை மக்கள் சென்று பார்வையிட்டபோது, வன பரிபாலன திணைக்களம் தடையேற்படுத்தியதாகவும் மக்கள் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் குறிப்பிட்டார். எனினும் அங்கு தொடர்ந்து இராணுவம் நிலைகொண்டுள்ளதால் தம்மால் ஒன்றும் செய்யமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து கவனஞ்செலுத்தி தம்மை மீள்குடியேற்ற அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும், பயன்தரு மரங்கள், காய்கறிகள் என செழித்து காணப்பட்ட தமது நிலம் தற்போது ஒன்றும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதாக இப்பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான ரி.தியாகராஜா (வயது-54) என்பவர் தெரிவித்தார். தாங்கள் கட்டிய வீடுகளின் கூரைகள் உடைக்கப்பட்டு, கற்கள் அகற்றப்பட்டு தற்போது அத்திவாரத்துடன் அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு காணப்படுவதாக தெரிவித்த தியாகராஜா, 30 வருடங்களாக சொந்த நிலத்தை பறிகொடுத்து வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தவிக்கும் தங்களை, சொந்த நிலத்தில் குடியேற்ற நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மக்களின் சொந்த நிலப்பகுதியில் இராணுவத்தினர் குடிகொண்டு, மக்களை குடியேறவிடாமல் தடுத்துவருகின்ற நிலமை வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. நல்லாட்சியை ஏற்படுத்த பெரும்பங்கு வகித்த இம்மக்கள், அதற்கான பலனை எதிர்பார்த்து இரண்டு வருடங்களாக காத்திருப்பதோடு, தமது சொந்த இடத்தில் குடியேறுவதே தமது வாழ்நாள் கனவாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.