வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு



புதிதாக நியமனம் பெறவுள்ள அதிபர்களுக்கு - பொறுப்பாக பாடசாலைகளை வழங்குவதைத் தடைசெய்யும் வகையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு  இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறுகுறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில்மேலும் தெரிவிப்பதாவது,

26.05.2016 அன்று - தற்போது கடமை நிறைவேற்று அதிபர்களாகக் கடமையாற்றுபவர்களை அகற்றாது – புதிய நியமனம் பெறவுள்ள அதிபர்களை நியமிப்பது தொடர்பாக - உங்கள் மாகாண சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக – பின்வரும் காரணங்களை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு - இதுவொரு மிகத் தவறான முன்னுதாரணமாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 

01. 06.2006 ஆம் இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கையின் படி - இலங்கையில் உள்ள சகல அரசாங்க சேவைகளுக்கும் ஆட்சேர்ப்பு உட்பட சகல விடயங்களையும் உள்ளடக்கிய சட்டமாக்கப்பட்ட பிரமாணக்குறிப்பு உள்ளது.

02. இலங்கையிலுள்ள அரச சேவைகளில் ஒன்றான - இலங்கை அதிபர் சேவைக்கும் 1985.01.01 தொடக்கம் சட்டமாக்கப்பட்ட பிரமாணக்குறிப்பு உள்ளது. இது 1086ஃ26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் 1997.01.01 தொடக்கம் மறுசீரமைக்கப்பட்டது. 06ஃ2006 ஆம் இலக்க அரசாங்க நிருவாக சுற்றறிக்கை விதிகளின் படி மீண்டும் 2014.10.23 ஆம் திகதிகொண்ட 1885ஃ31 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையிலுள்ள 4891 பாடசாலைகளுக்கு 3 ஆம் வகுப்பு அதிபர்களை நியமிக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

03. 2014.10.22 அன்று விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட 2008.07.01 திகதி முதல் செயற்படும் - இலங்கை அதிபர் சேவையின் பிரமாணக் குறிப்பின் படி - 07 ஆம் பிரிவின் கீழே இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு என்னும் தலைப்பின் கீழ் - குறிக்கப்பட்ட கல்வி, தொழில் தகைமைகளுடன் சேவையின் 3ஆம் வகுப்புக்கு மட்டும் - போட்டிப் பரீட்சையின் மூலம் எவ்வாறு ஆட்சேர்ப்பு செய்வது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

04. இதன்படி 10 வருடங்களுக்குப் பின்னர் 2015.04.10 திகதிய வர்த்தமானியில் விண்ணப்பம்கோரி 2015.11.21 அன்று போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது. சுமார் 19000 பரீட்சார்த்திகள் தோற்றிய இந்தப் பரீட்சையில் 4079 பேர்கள் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டு – முறையான நேர்முகப் பரீட்சையில் 3859 பேர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகின்றது. 

05. இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதன்படி - இவர்களுக்கு முறையாக 74 பயிற்சி நிலையங்களில் சேவைக்காலப் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. முதல்முறையாக இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளவர்களுக்கு உயர்ந்த தரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.

06. வடமாகாணத்தைச் சேர்ந்த சுமார் 4000க்கு மேற்பட்டோர் இந்த அதிபர் சேவை போட்டிப்பரீட்சைக்குத் தோற்றினர். இவர்களில் இப்போது கடமைநிறைவேற்று அதிபர்களாக இருக்கும் ஏறத்தாள 300 பேர்களும் உள்ளடங்குவர். மொத்தமாக – வடமாகாணத்தில் இருந்து சித்திபெற்ற 396 பேர்கள் இந்தப் பயிற்சியைப் பெற்றுவருகின்றனர்.

07. இந்தப் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய கடமைநிறைவேற்று அதிபர்களில் மிகக் குறைந்த வீதத்தினரே சித்தியடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

08. 2011.02.05 அன்று மேற்கொள்ளப்பட்ட 2011ஃநுனுஃநுஃ14 இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் படி – அப்போது யுத்தகாலத்தில் கடமைநிறைவேற்று அதிபர்களாக கடமையாற்றிய தகைமையுள்ளவர்களுக்கு அதிபர் நியமனம் வழங்கப்பட்டுவிட்டது என்பதை உங்கள் சகலரது கவனத்துக்கும் கொண்டுவருகின்றோம்.

09. பாடசாலை அதிபர் ஒருவர் இடமாற்றம் பெறும்போது அல்லது ஓய்வுபெறும்போது – அதிபர் சேவையைச் சேர்ந்த ஒருவர் இல்லாத பட்சத்தில் பாடசாலையில் கடமையாற்றும் சிரேஸ்ட ஆசிரியருக்கு புதிய அதிபர் நியமிக்கப்படும்வரை பாடசாலைப் பொறுப்புக்களை ஒப்படைப்பதே வழக்கமாகும். 

10. இன்று வடமாகாணத்தில் மட்டுமல்ல - இலங்கையில் உள்ள சகல மாகாணங்களிலும் கடமைநிறைவேற்றும் அதிபர்களாக உள்ளவர்கள் அப்படி முறைப்படி கடமைப்பொறுப்பை எடுத்தவர்கள் அல்ல. அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் செல்வாக்கின்படி பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்களாக கடமைபார்த்து வருபவர்களாவர். பெரும்பாலானவர்கள் போட்டிப் பரீட்சைகளிலும் சித்தியடையாதவர்களாவர்.

11. இப்படியான சூழ்நிலையில் - சட்டபூர்வமான பிரமாணக்குறிப்பு இருக்கும் போது – கடமைநிறைவேற்று அதிபர்களை நிரந்தரமாக்கத்தக்க வகையில் - பொறுப்புள்ள மாகாணசபையொன்று தீர்மானம் எடுப்பது அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கையாகும். 

12. இந்த சட்டத்திற்கு முரணான – தவறான தீர்மானத்தை ஏனைய மாகாண சபைகளும் பின்பற்றினால் கல்வியில் மிகப்பெரிய பாதிப்பும் முரண்பாடும் உண்டாகும். 

13. இலங்கை அதிபர்சேவை போன்ற - நாடளாவிய சேவையொன்றை நியமிக்கும் அதிகாரம் - அரசசேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன்- கல்வியமைச்சின் செயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. அதனை மீறி – மாகாணசபையொன்று இத்தகைய தீர்மானத்தை எடுப்பது எந்தவகையில் நியாயமானதாகும். 

14. வடமாகாண சபையானது - மாணவர்களின் பண்புசார் தன்மையை விருத்திசெய்யும் வகையில் பயிற்சியளிக்கப்பட்டு - உரிய தகைமையுடன் அதிபர்களாக நியமனம் பெற்றவர்களிடம் பாடசாலைகளை ஒப்படைக்காது – கடமை பார்த்தவர்களுக்கு பாதிப்பு உண்டாகாத வகையில் நியமனம் வழங்க தீர்மானம் எடுத்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். 

15. 2011.02.05 திகதி மேற்கொள்ளப்பட்ட 2011ஃநுனுஃநுஃ14 இலக்க அமைச்சரவைத் பத்திரத்தின் தீர்மானத்தின்படி 2010.12.31 வரை கடமைபார்த்த – அத்திகதிவரை 3 வருடங்களை நிறைவு செய்த சகலருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதோடு - இனிமேல் இப்படியான நியமனம் வழங்கப்படமாட்டாது என்பதும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. வடமாகாண சபை தமிழ் மக்கள் சார்பாக - பொதுவாக எடுக்கும் தீர்மானங்களுக்கு எமது சங்கம் எதிரானதல்ல என்பதை இங்கு குறிப்பிடவிரும்புவதோடு – பிரமாணக் குறிப்பின்படி போட்டிப்பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களுக்கு உரிய இடம் வழங்காது – போட்டிப்பரீட்சைகளில் சித்தியடையாத - கடமை பார்ப்பவர்களை பாதுகாக்க எடுக்கப்படும் இப்படியான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

17. அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் கல்வியமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்ட நியமனதாரிகளுக்கு உரிய இடம் வழங்குவதை தடைசெய்யும் இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக - சட்டநடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதோடு தொழிற்சங்க நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவேண்டியேற்படும் என்பதையும் கவலையுடன் தெரிவிக்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.