உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க தீர்மானம்!
வட மாகாணத்தின் உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 400 ஏக்கர் காணிகளை, மிக விரைவில் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு இராணுவம் தீர்மானித்துள்ளதாக, அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில், யாழ்.தெல்லிப்பளையில் அமைந்துள்ள 200 ஏக்கர் காணிகள், இன்னும் ஓரிரு வாரங்களில் விடுவிக்கப்படுமென, மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, காங்கேசன்துறையில் 65 ஹெக்டேயர் நிலப்பரப்பு, மீள்குடியேற்றத்திற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், வடக்கில் 2,175.5 ஏக்கர் காணிகளும் கிழக்கில் 1,055 ஏக்கர் காணிகளும் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன. மக்களுக்குச் சொந்தமான ஏனைய காணிகளையும் விடுவிப்பது தொடர்பில் தொடர்ந்து ஆராயப்பட்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி தலைமையில் இதுகுறித்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது, வடக்கில் மீள் குடியேறுவதற்கு அடையாளம் காணப்பட்ட காணிகள் தொடர்பான இறுதி அறிக்கையை, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.