ஒரே நாளில் இலங்கையை சுற்றி வரும் முயற்சியில் வடக்கு இளைஞர்கள்
ஒரே நாளில் இலங்கையை சுற்றி வரும் விழிப்புணர்வு பயணத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் இயற்கையை பாதுகாத்தல், சுற்றுச் சூழலை வளமாக்குதல் தொடர்பிலான விழிப்புணர்வு பயணத்தை, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்துள்ளனர்.
இதில் வவுனியாவைச் சேர்ந்த பிரதாபன் மற்றும் இமயவன் ஆகிய இரு இளைஞர்களே ஒரே நாளில் 1,320 கிலோ மீற்றர் பயணம் செய்து இலங்கையை சுற்றிவர உள்ளனர்.
இவர்களது சாதனைப் பயணத்தினை வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா மற்றும் ஆர்.இந்திரராஜா ஆகியோர் பொன்னாடை போர்த்திக் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர்.
மேற்படி இந்தப் பயணம் தொடர்பாக இளைஞர்களான த.பிரதாபன் மற்றும் இமயவன் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,
“இந்த பயணம் ஓர் விழிப்புணர்வு சார்ந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் ஆரம்பித்து சங்குப்பிட்டி ஊடாக மன்னாரை அடைந்து அங்கிருந்து வில்பத்து தேசிய சரணாலயத்தினூடாக புத்தளம் நீர் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, கதிர்காமம், பொத்துவில், அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை முல்லைத்தீவு பரந்தன் கிளிநொச்சி ஆனையிறவு ஊடாக நல்லூரில் நிறைவடையவுள்ளது.
1320 கி.மீ தூரத்தை ஒரு நாளில் சுற்றி வர உள்ளோம். இதனை உலக சுற்றாடல் தினத்திற்கு அர்ப்பணிக்கவுள்ளோம். இன்றைய உலகில் அணு ஆயுத அபாயம் பிளாஸ்டிக் கெமிக்கல் இரசாயணம் கலக்கப்பட்ட உணவு வகை பழவகை போன்றவற்றினால் இந்த பூமிப் பந்து பாதிப்படைந்து வருகின்றது.
அடுத்த சந்ததிக்கு பூமியை பாதுகாத்து கொடுக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு என்பதனை உணர்த்தும் நோக்கில் இப்பயணம் அமைகின்றது. இதனை பொறுப்பு வாய்ந்தவர்களும் உணர வேண்டும். என்பதனை நினைவு படுத்த விரும்புகின்றோம். அதன் பொருட்டு நாமிருவரும் மோட்டார் சைக்கிளில் குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளோம்” என்றார்கள்.
பிரதாபன் என்ற இளைஞன் கடந்த வருடமும் இவ்வாறான ஒரு பயணத்தை வட மாகாணத்தை சூழ மேற் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.