ஈழ விடுதலைப் போராட்ட முதல் வீரன் தியாகி சிவாகுமாரனின் 42 வது நினைவு நிகழ்வுகள்
ஈழ விடுதலைப் போராட்ட முதல் வீரன் தியாகி சிவாகுமாரனின் 42 வது நினைவு நிகழ்வுகள் நேற்றைய தினம் உரும்பிராயில் அமைந்துள்ள அவரது உருவச் சிலை முன்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பல்வேறுபட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள் , பொது மக்கள் மற்றும் சிவகுமாரனின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் சிவகாமாரனின் உருவச் சிலைக்கு சிவகுமாரனின் சகோதரி , பாராளுமன்ற உறுப்பினர் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள் பொதுமக்கள். கட்சி உறுப்பினர்கள் என பலரும் ஒன்று கூடி மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றது.
அஞ்சலி உரைகளில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் உரையாற்றுகையில் ,
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டத்தின் முதல்போராளி சிவகுமாரன். அப்போது இப் போராட்டங்களை ஆரம்பித்தவேளையில் எல்லோரும் திரளாகப் பார்த்தனர் ஆனால் போதிய அளவில் உதவ முன்வரவில்லை. நான் பார்த்த போராளிகளில் மிகவும் தூய்மையான போராளிகளில் சிவகுமாரனும் ஒருவர்.
அந்தக் காலங்களில் சிவகுமாரன் செயல்படுத்த நினைத்தவற்றை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருந்தாலும் இந்த முதல் வீரனின் நினைவு அனைவரின் மனதிலும் இருக்கவேண்டும். அதனை இருக்க வைக்கப்படவேண்டும் என்றார்.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உரையாற்றுகையில்
,ஆயுதப் போராட்டத்தின் முன்னோடியான சிவகுமாரனை நினைவு கூரும் இந்த காலகட்டத்தில் கூட தமிழ் மக்களின் பரிதாப நிலமை மாரவில்லை. இன்றும் கேள்விக்குறியாகவேயுள்ளது.
சிவகுமாரனின் வழி காட்டலில் பயணித்த ஆயிரம் ஆயிரம் போரிளிகளுடன் லட்சக்கணக்கான மக்களின் மரணத்தின் பின்பும் இதுதான் நிலமையாகவே உள்ளது.
தமிழ் மக்களின் போராட்டத்திற்கு வித்திட்ட சிவகுமாரனின் வாழ்க்கையானது விடுதலைக்கான வழிகாட்டியாகவே அமைந்தது. அதேபோன்று இவரின் வரலாற்றை தற்போதைய தலமைகளும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்றார்.
வட மாகாணசபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா உரையாற்றுகையில் ,
சிவகுமாரனுடன் ஒன்றாய் இணைந்து பணியாற்றியவர்களில் நானும் ஒருவன் . ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்த சிவகுமாரனின் முதல் தாக்குதல் பிரதி அமைச்சர் சோமவீர சந்திரசிறியின் வாகனம் மீதான தாக்குதல் ஆகும். இதன் பிற்பாடு மூன்றாம் நாள் கைது செய்யப்பட்டார்.
இவரை கைது செய்து அநுராதபுரம் சிறையில் வைத்திருந்தனர். இவ்வாறான கைதுகளிற்கு கொழும்பில் தான் இந்தக்காலத்தில் பிணை எடுக்க வேண்டும். இதற்காக இங்கிருந்த ஓர் பாராளுமன்ற உறுப்பினரிடம் கடிதத்தினை வாங்கிக்கொண்டு பிணை எடுப்பதற்காக கொழும்பில் உள்ள ஓர் சட்டத்தரணியிடம் போனோம். அப்போது அவர் கேட்டார் எம்மைக் கேட்டு குண்டு வைத்தீர்கள் என.
பிற்காலத்தில் சிவகுமாரனின் இறப்பிற்குப் பின்னர் 4 வது நினைவு நிகழ்வு வெள்ளவத்தை இராமகிருஸ்னாவில் இடம்பெற்றபோது இதே சட்டத்தரணி உரையாற்றினார் சிவகுமாரன் எமக்கு வழிகாட்டினார் என . அவ்வாறு அனைவரையும் ஒன்றினைய வைத்தவர். என்றார்.
மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உரையாற்றுகையில் ,
இன்று இந்த சிவகுமாரனின் நிகழ்விற்கு பல கட்சியையும் சேர்ந்தவர்கள் ஒன்றினைந்திருப்பது ஓர் திருப்புமுனையே , இலங்கையில் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தலுக்கு எதிராக மாணவர் பேரவையை உருவாக்கி போராடியவருக்கு உலகத் தமிழராச்சி மாநாட்டுப் படுகொலையே அப்போது மிகவும் உலுக்கியது.
இதன் பிற்பாடே ஆயுதத் தாக்குதலை மேற்கொண்டார். அது மட்டுமன்றி தமிழராச்சி மாநாட்டில் தாக்குதல் நடாத்த காரணமாக இருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகரா மீதும் இருமுறை தாக்குதலை மேற்கொண்டவர்.
இவ்வாறு ஆயுதப் போராட்டத்தின் வழிகாட்டியாகத் திகழும் சிவகுமாரனின் பிறப்பும் , இறப்பும் கூட அரசியல் தலைவர்களின் வரலாற்றுடன் ஒட்டியுள்ளது.
அதாவது தலைவர் அமிர்தலிங்கத்தின் பிறந்த நாளே சிவகுமாரனின் பிறந்த நாள். அதேபோன்று மற்றுமோர் தலைவரான சிவசிதம்பரம் ஐயாவின் மரணதினமே சிவகுமாரனின் இறந்த தினம் ஆகும். என்றார்.