மஹிந்தவிற்கு இறுதி எச்சரிக்கை
மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தால் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும், குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பொது எதிர்கட்சியினர் ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போது, உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுமென தெரிவித்திருந்தனர்.
மேலும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தமது புதிய கட்சியின் சார்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அபேட்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளதோடு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தோர் பலர் தம்மோடு இணையவுள்ளதாகவும், தேர்தலில் வெற்றிபெறுவோம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புதிதாக ஆரம்பிக்கப்படும் கட்சி ஒன்றினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு நெருக்கடியினை வழங்க முடியாது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.