நாம் அமைச்சு பதவிகளை கோரவில்லை : முத்து சிவலிங்கம்
நாம் ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவிகளைக் கேட்கவில்லை என்றும், யாருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கினால் அதனை தடுக்கப்போவதில்லை என்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் அமைந்துள்ள இ.தொ.காவின் தொழிற்பயிற்சி கேட்போர் கூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகசந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பத்து வருட காலமாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டு தற்பொழுது ஆட்சியில் உள்ளார். இவருடன் நாங்கள் கலந்துரையாடல் செய்து மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுப்படுத்தியதன் காரணமாக ஜனாதிபதி மலையக மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இணங்கியுள்ளார்.
நாங்கள் ஜனாதிபதியை சந்தித்த போது அமைச்சு பதவிகள் எதுவும் கேட்கவில்லை. கேட்கபோவதும் இல்லை. ஏனையவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கினால் அதனை தடுக்க போவதும் இல்லை.’ என்றும் கூறினார்.