வேட்பாளர் பட்டியலில் 30 வீதம் பெண்கள் – மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம்
வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 30 சதவீத இடமளிக்கும் வகையில், மாகாணசபைகள் தேர்தல் சட்டம் திருத்தப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட இணை அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக,
“வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 30 சதவீத இடமளிக்கும் வகையில், 1988ஆம் ஆண்டின் 2ஆவது இலக்க மாகாணசபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
இதுதொடர்பான சட்டமூலத்தின் வரைவு மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சரவை இதற்கு நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில், வேட்பாளர் பட்டியலில் 25 சதவீதம் பெண்களை உள்ளடக்க வழி செய்யும் சட்டத் திருத்தம் கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.