அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு சிவாஜி கோரிக்கை!
இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு அதன் கீழ் கைதுசெய்யப்பட்டு நீணடகாலமாக சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என வட மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்ற போதிலும் அதிலுள்ள சில சரத்துக்களை காரணம் காட்டி தொடர்ந்தும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் விசனம் தெரிவிக்கின்றார்.
குறிப்பாக நீதிமன்றத்தால் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டால், அது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பித்து, 3 கிழமைகளுக்குள் அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்பதே நடைமுறையாக இருந்து வருகின்ற போதிலும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவ்வாறான நடைமுறை பின்பற்றப்படாமல் அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை காணாமற்போனோர் விடையத்திலும் தமிழ் அரசியல் கைதிகள் விடையத்திலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நல்லிணக்கம் உருவாக்க முடியாது என்றும் கூறிய சிவாஜிலிங்கம் இதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.