சித்திரவதைகள் தொடர்பானஅறிக்கை : ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிடம்
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக சிவில் அமைப்புக்களினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கொழும்பிலுள்ள நிரந்தர வதிவிட பிரதிநிதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி சர்வதேச சித்திரவதை தினத்தன்று இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சிவில் அமைப்புக்கள் தெரிவித்தன.
இதன் பிரதி ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டன.
பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய 20 சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளன.
அறிக்கை தயாரித்தல் தொடர்பான முதலாவது கலந்துரையாடல் கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்றதோடு, தயாரிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில், பிறிட்டோ பெர்னாண்டோ, சுந்தரம் மகேந்திரன், ஜனகன் உள்ளிட்ட பல சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் சித்திரவதைகள் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், சிவில் அமைப்புக்களும் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி இந்த அறிக்கையை தயாரித்துள்ளன.
மேலும், வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக பணியாற்றும் சில சிவில் அமைப்புக்களுக்கு இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படபோதிலும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.