பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் : சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்
நல்லிணக்க செயற்பாடுகள் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக சர்வதே தரத்துடன் கூடிய சட்டம் வரவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிரதிநிதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்குறித்து ஆராய சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தமை காணாமல்போனோர் விடயத்தில் முக்கிய படிமுறையாகும்.
எவ்வாறெனினும் அரசாங்கம் வழங்கிய இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக சர்வதே தரத்துடன் கூடிய சட்டம் வரவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
நீதி விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் விசாரணையாளர்களையும் பங்குபற்ற வைக்குமாறு ஜெனிவா பிரேரணையில் வலியுறுத்தப்பட்டது. எனினும் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறமாட்டர்கள் என ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த நிலைமையானது சர்வதேச பங்களிப்பை கேள்விக்குட்படுத்தலாம் என்றார்.
ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி உரையாற்றுகையில்,
அண்மைக்காலத்தில் பாதிக்கப்பட்டவர்ளுக்கு நீதி வழங்க ஒரு அளவு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை யுத்தத்தில் போர் குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றதாக கருதப்படுகின்றது. அரசாங்கத்தின் தகவல்படி 8,000 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6,350 பேர் காணாமல் போயுள்ளனர்.
எனினும் ஐ.நா. நிபுணர் குழுவானது 40,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறுகிறது. மேலும் தமிழ் ஆண்கள் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டம் இன்னும் தொடர்கிறது. சர்வதேச நீதிபதிகளை விசாரணை பொறிமுறையில் உள்ளடக்கப்பட வேண்டுமென ஜெனிவா பிரேரணை கூறுகிறது. ஆனால் இலங்கையானது உள்ளக விசாரணை பொறிமுறையை மட்டுமே நிறுவுவதற்கு அனுமதியளித்துள்ளது.
அநீதிகளை இழைத்தோர் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது. அரசாங்கத்தின் செயற்பாடுகளானது பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமெ தவிர இடமாற்றமாக அமைய கூடாது.