தமிழர்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுக்கவே யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவந்தோம்!
தமிழ் மக்களுக்கு சம உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் தமது அரசாங்கம் உறுதியாக இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே எனது அரசாங்கம் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தது.
30 ஆண்டுகளாக நீடித்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடிய யுத்தத்தினை எனது அரசாங்கமே முடிவுக்கு கொண்டு வந்தது. தமிழ் மக்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்த்து மற்றும் சமாதானம் உள்ளிட்டவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் உறுதியாக இருந்தது.
அதற்காக வேண்டியே விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடிய யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தேன். எனினும், எனது ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை மூடி மறைக்கும் முயற்சியில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் இறங்கியுள்ளது.
தேர்தல் காலங்களில் பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து அரசாங்கம் காலத்தினை வீணடித்து வருகின்றது.
அத்துடன், என்மீது வீண்பழி சுமத்தி வழக்கு தொடர்வதற்கு எதிர்பார்த்துள்ளனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை வழங்குவதற்கு எனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும், அவற்றை மறந்து அரசியல் பழிவாங்கும் நோக்கிலேயே தற்போதையை நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.