Breaking News

 'மூளையை வைத்துவிட்டு சபைக்கு வந்த இருவர்'

இராஜாங்க அமைச்சர்களில் ஒருவரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், தங்களுடைய மூளைகளை வீடுகளில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக ஒருவரை ஒருவர், சபையில் நேற்று வியாழக்கிழமை (23) குற்றஞ்சாட்டிக்கொண்டனர். 

நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில், நேற்றுக் காலை 10.30க்கு, நாடாளுமன்றம் கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்து, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பமானது. 

இதன்போது, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, 2013, 2014, 2015ஆம் ஆண்டுகளில், இலங்கை மத்திய வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்களின் பெறுமதி தொடர்பில், பிரதம அமைச்சரும் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரிடம் கேட்டிருந்தார். 

கேள்விகளுக்கு, இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா பதிலளித்தார். கேள்விகளைக் கேட்டிருந்த உதய கம்மன்பில, தான் கேட்ட குறுக்குக் கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் முறையாகப் பதிலளிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியதுடன், 'வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்கிறார். அந்த இராஜாங்க அமைச்சர், மூளையை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டார். 

மூளையை எடுத்துவரும் நாள் எது?' என்று கேட்டுவிட்டார். கேள்விகளுக்குப் பதிலளித்துக்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, 'நான் வீட்டில்தான் வைத்துவிட்டு வந்துவிட்டேன். ஆனால் இவரோ (உதய கம்மன்பிலவைப் பார்த்து), சிறைச்சாலையில் வைத்துவிட்டு வந்துவிட்டார்' என்றார்.